திருச்சியில் ரகசியமாக நடத்தப்பட்ட கல்வி கொள்கை கருத்துகேட்பு கூட்டத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டம்

திருச்சி: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மத்திய மண்டலத்துக்கான தேசிய கல்விக் கொள்கை-2019 கருத்துக்கேட்பு மற்றும் கருத்துபட்டறை திருச்சி தனியார் கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர்.தகவலறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, புரட்சிகர மாணவர் இயக்கம் ஆகியவை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை கல்லூரி நுழைவுவாயிலிலே போலீசார் தடுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள், மக்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களை அழைத்து புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்காமல் ரகசியமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாகவும், அனுமதிக்காவிட்டால் சாலை மறியல் செய்வோம் எனவும் அறிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டாலும், கூட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கூட்டமன்றத்துக்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ரகசியமாக கருத்துக்கேட்பு நடத்தக்கூடாது என்று கோஷமிட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் பொன்குமார், இது புதிய கல்வி கொள்கைக்கான கருத்து கேட்பு கூட்டம் இல்லை. வெறும் ஆலோசனை கூட்டம்தான். முறையான அறிவிப்புக்கு பின்னர்தான் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.பாதியில் முடிந்த கோவை கூட்டம்: கோவையில் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தின்போது, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன், ம.தி.மு.க ஈஸ்வரன், மாணவர் நல பெற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் கல்வியாளர்கள் திடீரென முற்றுகையிட்டனர். மேலும், கூட்டம் நடத்திய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். இதைத்தொடர்ந்து, கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது.

Related Stories: