பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் 3 லாரி, 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி: 16 பேர் படுகாயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடத்தில் 3 லாரிகள், 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வல்லாபுரம் பிரிவில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை அறியாமல் சென்னையிலிருந்து தஞ்சை சென்ற ஆம்னி பஸ், கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் 15 பயணிகளை, வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி கொண்டிருந்தனர். அதேநேரம் விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லாரி அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டு சென்றது.இந்த விபத்தையொட்டி போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் புதுச்சேரியில் இருந்து மதுரை நோக்கி சென்ற டேங்கர் லாரி ஒன்று, விபத்து நடந்திருப்பதை அறிந்து திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது. அப்போது, பின்னால் வந்த பார்சல் லாரி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் டேங்கர் லாரி மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்சல் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவரான தேனி மாவட்டம், தக்கன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (48) சம்பவ இடத்திலேயே பலியானார்.

அடுத்த ஒரு சில வினாடியில் விபத்துக்குள்ளான அரசு விரைவு பஸ் மீது, பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ் மோதியது. இதில் விரைவு பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டம், பூச்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(42) பலியானார். விபத்தில் காயமடைந்த பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரம் பெரியசாமி(70), பெரியம்மாபாளையம் முருகேசன்(47), தேனி மாவட்டம், ஜக்கம்பட்டி கருப்புசாமி(55), திண்டுக்கல் மாவட்டம், கரட்டூர் முருகன் மனைவி தமிழ்ச்செல்வி(50) உள்ளிட்ட 16 பேரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 30 நிமிடத்துக்குள் 3 லாரிகள், 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பானதுடன் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: