தமிழகத்தில் 24 மணிநேர மின் வினியோகத்திற்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரியை வழங்க  வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய நிதியமைச்சர் மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில்24 மணி நேரமும் மின்சாரம் தொய்வின்றி வழங்குவதற்கு தேவையான நிலக்கரி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 4320 மெகாவாட் அனல்மின் நிலையங்களை முழு திறனில் இயக்குவதற்கு நாளொன்றுக்கு சுமார் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

இதற்கு இந்திய நிலக்கரி நிறுவனத்திடம் நாளொன்றுக்கு 61,000 மெட்ரிக் டன்கள் நிலக்கரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களில் இந்நிறுவனம் ஒப்பந்த அளவில் 60% மட்டுமே வழங்கியுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகம் செய்யும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். காற்றாலை மின்உற்பத்தி மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. மேலும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் காற்றாலை மின்சாரம் கிடைக்காத காரணத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனைத்து அனல்மின் நிலையங்களும் முழு கொள்ளளவில் இயங்க வேண்டியுள்ளது. மேலும் வடமாநிலங்களில் மழைகாலம் தொடங்கி விட்டதால், நிலக்கரி கை இருப்பினை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.

ஆகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கவேண்டிய 72,000 மெட்ரிக் டன் நிலக்கரியை முழுமையாக வழங்கவேண்டும்.  ரயில்வே துறையும் தினமும் 20 ரேக்குகள் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மந்தாகினி-ஏ, உடல்கல்-சி ஆகிய இரு நிலக்கரித் தொகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும். வடசென்னை மூன்றாம் நிலை மற்றும் உப்பூர் ஆகிய இரு அனல் மின் திட்டங்களின் பயன்பாட்டுக்காக ஆண்டொன்றுக்கு 5.913 மில்லியன் டன் அளவிற்கான நீண்ட காலநிலக்கரி இணைப்பை மகாநதி நிலக்கரிவளாக நிறுவனத்திடமிருந்து வழங்கிட வேண்டும்.

எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், உடன்குடி மற்றும் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் ஆகிய அனல் மின்திட்டங்களின் பயன்பாட்டிற்காக ஆண்டொன்றுக்கு 9.214 மில்லியன் டன் அளவிற்கான இடைக்கால நிலக்கரி இணைப்பை மகாநதி நிலக்கரி நிறுவனத்திடமிருந்து வழங்கிட வேண்டும்.

மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சந்திரபிலா நிலக்கரித் தொகுதியின் மேற்படிவுகளைக் கொட்டுவதற்குத் தேவையான கூடுதல் நிலப்பரப்பு ஒதுக்கீடு மற்றும் அத்தொகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் அகழ்ந்தாய்வு செய்யத் தேவையான சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி வழங்கல் ஆகியவற்றில் ஏற்பட்ட காலதாமதத்தின் காரணத்தால் மேம்பாடு மற்றும் நிலக்கரி அகழ்ந்தெடுப்பு தொடக்கத்திற்காக வரையறுக்கப்பட்ட கால அளவினை நீட்டித்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு பரிசீலித்து தேவையான உதவிகளை செய்வதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: