×

லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர்? மாநகராட்சி அதிகாரிகள் ரகசிய ஆய்வு

கூடலூர்: லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கம்பம் பள்ளத்தாக்கு மக்களிடம் எதிர்ப்புள்ளதால், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் முல்லைப்பெரியாறு ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணை கட்ட உள்ள இடத்தை நேற்று ரகசியமாக ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாற்றின் தலை மதகான லோயர்கேம்ப்பில் இருந்து ரூ.1,300 கோடி செலவில் கம்பம் கூட்டுக் குடிநீர் திட்ட தடுப்பணைக்கு மேல் பகுதியில் புதிய தடுப்பணை கட்டி குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனால், ‘கோடை காலங்களில் பெரியாறு அணையிலிருந்து குறைந்த அளவே திறந்து விடப்படும் தண்ணீர் கம்பம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பணைக்கு வந்து சேராது, குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை ஏற்படும்’ எனக்கூறி இப்பகுதி மக்களும், விவசாயிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு பூமிபூஜையை துவக்க அதிகாரிகள் வந்த போது, இப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால்   திரும்பி சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் அவ்வப்போது 18ம் கால்வாய் வழியாக முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர், ரகசியமாக லோயர் முல்லை பெரியாறு ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணை பணி தொடங்க உத்தேசித்துள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ உடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கூடலூர் மக்கள் மன்ற செயலாளர் புதுராஜா கூறுகையில், ‘10 கோடி ரூபாய் செலவில் வைகை அணையை தூர் வாரினால் அதன் முழு கொள்ளளவை நிரப்பலாம். பின் ஆற்றின் வழியே பிற மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பராமரிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கர்னல் பென்னிகுக் மற்றும் காமராஜர் ஆகியோரின் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றலாம். மேலும் இத்திட்டத்தின் மூலம் மிச்சப்படும் 1,290 கோடி ரூபாயை பிற சமூகநலத் திட்டங்களுக்கு தமிழ அரசு பயன்படுத்தலாம். எனவே லோயர்கேம்பில் இருந்து ராட்சத குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்’ என்றார்.


Tags : Madurai, Drinking Water, Lower Camp, Kambam Valley, Mullaperiyar
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...