×

பழநி சண்முகாநதியில் தூர்வாரும் பணி

* வசூல் வேட்டையால் வியாபாரிகள் திணறல்

பழநி : பழநி சண்முகாநதியை தூர்வாருதாகக் கூறி புற்றீசல் போல் கிளம்பும் திடீர் அமைப்புகளின் வசூல் வேட்டைகளால் வியாபாரிகள் திணறிப்போய் உள்ளனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முகாநதியில் குளித்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் சண்முகாநதி ஆற்றில் தற்போது அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பக்தர்கள் குளிக்க முடியாமல் அவதியடைந்து வந்தனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறையிடம் பலமுறை முறையிட்டும் பலனேதுமில்லை. மேலும், சண்முகாநதி ஆற்றிலேயே அப்பகுதியில் உள்ள கடைகளின் கழிவுநீரும் கலக்கின்றன. இதனால் தேங்கி உள்ள நீரின் தூய்மைத்தன்மை குறைந்து சகதியாக மாறிவிட்டது. இந்நிலையில் தன்னார்வலர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பெயரில் சிலர் அமலைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஆனால், பெயரளவிற்கு நடந்த அமலைச்செடிகளை அகற்றி, அதனை படம் எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதவிட்டு விட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர்.

இதுபோன்ற போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் நடவடிக்கையால் சண்முகாநதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சண்முகாநதியில் உள்ள அமலைச்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யப்போவதாக தற்போது புற்றீசல்போல் ஏராளமான திடீர் அமைப்புகள் பழநியில உருவாகி உள்ளன. இதில் சில அமைப்புகளின் நிர்வாகிகள் சண்முகாநதியில் உள்ள அமலைச்செடிகளை அகற்றப்போவதாகவும், அதற்காக நிதி உதவி செய்ய வேண்டுமென்றும் கூறி பழநியில் உள்ள கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த திடீர் வசூல் வேட்டையால் வியாபாரிகள் கதிகலங்கி போய் உள்ளனர். பொதுப்பணித்துறை சண்முகாநதி தூய்மை செய்ய வேண்டுமென்றும், போலீசார் இதுபோன்ற வசூல் கோஷ்டியை காண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














Tags : Palani, lord Murugan Temple,Shanmuga River
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...