×

புதிய கட்டிடம் கட்டுவதாக பள்ளி இடிப்பு சமுதாயக்கூடத்தில் நடக்கும் பள்ளிக்கூடம்

* 2 ஆண்டுகளாக பணிகள் தொடங்கவில்லை3
* சூரம்பட்டி மக்கள் குழந்தைகளுடன் போராட்டம்

காரியாபட்டி : காரியாபட்டி அருகே சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி குழந்தைகளுடன் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டியில் அரசு உதவிபெறும் ஆர்.சி துவக்கப்பள்ளி 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் புதிய கட்டிடம் கட்ட போவதாக கூறி பள்ளியை இடித்தனர். புதிய கட்டிடம் கட்டும்வரை சூரம்பட்டியில் இருந்த சமுதாய கூடத்தில் பள்ளியை இயக்குவது என முடிவு செய்தனர்.

தற்போது சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்  கட்டுமான பணிகள் ஆரம்பிக்கவே இல்லை. சமுதாய கூடத்தில் மின்சாரம், கழிப்பறை வசதி இல்லை. சமையல் அறை இல்லை. திறந்த வெளியில் சமைக்கின்றனர். இதனால் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்கி வருகின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை வேண்டும் என கோரி குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேற்று பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.

ஊர் பெரியவர் ராமையா கூறுகையில், ‘‘புதிய கட்டிடம் கட்டுமாறு ஒட்டுமொத்த கிராம மக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 60 பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளி கட்டடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ஈஸ்வரபாண்டியன் கூறுகையில், ‘‘ஊரில் விசேஷங்கள் நடத்துவதற்கு கட்டி வைத்த சமுதாயக் கூடத்தில் தற்போது பள்ளி இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதி எதுவுமே இங்கு இல்லை. எனவே பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பஞ்சவர்ணம் கூறுகையில், ‘‘சமுதாயக் கூடத்தில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண் பிள்ளைகள் அவசரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறை வசதி இல்லை. இதனால் மக்கள் வெளியூர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.  இந்நிலை நீடிக்காமல் இருக்க அரசாங்கம் எங்கள் பிள்ளைகளின் எதிர்கால நிலை கருதி கட்டடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Kariyapatty, government school,officials action, students suffering
× RELATED 2 ஒன்றிய அமைச்சர், துணை முதல்வர், எம்பி,...