தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

* மலை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

சத்தியமங்கலம் :தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என மலைகிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளது. சத்தியமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட தாளாவடி மலைப்பகுதி மக்கள் சிட்டா, ஆர்எஸ்ஆர், அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்ட சான்று பெற 60 கி.மீ. தொலைவில் உள்ள சத்தியமங்கலம் வந்து செல்லவேண்டிய நிலை இருந்ததால் தாளவாடி தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து கடந்த 2015 ம் ஆண்டு தாளவாடி தனித்தாலுகாவாக அறிவிக்கப்பட்டது.

 ஏற்கனவே, தாளவாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, போக்குவரத்துக்கழக கிளை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதால் மலைகிராம மக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழை தாளவாடியில் பெறும் வசதி கிடைத்துள்ளது. தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் மருத்துவ வசதி மட்டும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

தாளவாடி வட்டாரத்தில் தாளவாடி நகர்ப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், இதன்கீழ் பையனாபுரம், ஒங்கல்வாடி மற்றும் கேர்மாளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், தாளவாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. மற்ற அனைத்து சிகிச்சைக்கும் 60 கி.மீ. தொலைவில் உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும், தாளவாடி மலைப்பகுதியில் விபத்து ஏற்பட்டு இறப்பவர்களின் சடலமும்  பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால் மலைகிராம மக்கள் சடலங்களை உரிய நேரத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத அவல நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டுள்ளதால் பிரசவத்திற்கு வரும் பெண்களிடம், சுகப்பிரசவம் மட்டும் பார்க்கப்படுவதாகவும், சிசேரியன் உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் பெரும்பாலான நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதியும், பிரேதப்பரிசோதனை செய்யும் வசதியும் கிடைக்கும் என்பதால் தாளவாடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தாளவாடி மலை கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.

Related Stories: