×

33 ஆண்டு கால கனவு நனவாகிறது தென்காசி தனி மாவட்ட அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

* வளங்கள் நிறைந்த பகுதி இனி வளர்ச்சி பெறும்

தென்காசி :  தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கை நிறைவேறியுள்ளது. ‘மக்களின் குரலை’ ஏற்றுக் கொண்டு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி மாவட்டமாக்கப்படும் என்று அறிவித்ததை பொதுமக்களும் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். நெல்லை மாவட்டம் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் 1790ம் ஆணடு செப்டம்பர் 1ம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்ெபனியால் உருவாக்கப்பட்டது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைந்து இருந்தன.

சுதந்திரத்திற்கு பிறகு 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தினை பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போதே தென்காசியையும் பிரித்து தனி மாவட்டமாக்கும்படி மக்கள் கோரினர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக வலுப்பெற்ற கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் 6 ஆயிரத்து 823 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நெல்லை மாவட்டம் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30 லட்சத்து 72 ஆயிரத்து 880 பேர் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் இதுவரை தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் , நான்குனேரி உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் நெல்லை மக்களவை தொகுதியிலும், தென்காசி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய நான்கு தொகுதிகளுடன் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளும் சேர்ந்து தென்காசி மக்களவை தொகுதியாக இடம் பெற்றுள்ளது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகிரி, நான்குனேரி, ராதாபுரம், வீரகேரளம்புதூர், ஆலங்குளம், கடையநல்லூர், திசையன்விளை, திருவேங்கடம், மானூர், சேரன்மகாதேவி ஆகிய 16 தாலுகாக்கள் உள்ளன.

நெல்லை மாவட்டம் இப்படி பரந்து விரிந்து கிடப்பதால் மாவட்டத்தின் எல்லையில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக மாவட்ட எல்லையான புளியரை கோட்டை வாசலில் இருந்து நெல்லைக்கு சுமார் 80 கிலோமீட்டரும், சிவகிரியிலிருந்து நெல்லைக்கு சுமார் 95 கிலோமீட்டரும் மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. மருத்துவ மேல்சிகிச்சைக்காக நெல்லைக்கு வர வேண்டும் என்றால் மிகவும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே பிற்கால பாண்டிய மன்னர்களில் ஒருவரான பராக்கிரம பாண்டியரின் ஆட்சி தலைநகராக விளங்கிய தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 33 ஆண்டுகளாக செவிமடுக்கப்படாமலே இருந்து வந்தது. பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கருப்பசாமி பாண்டியன்,  சரத்குமார்,  அமைச்சர் ராஜலட்சுமி, செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வரை சந்திக்கும்போதெல்லாம் முதல் கோரிக்கையாக இதனையே விடுத்து வந்தனர். மிகச் சமீபத்திய கோரிக்கையான கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் கோரிக்கை கூட நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் தென்காசி தனி மாவட்ட கோரிக்கை 33 ஆண்டுகளாக காலம் தாழ்த்தப்பட்ேட வந்தது.

 தனி மாவட்டத்திற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும் ஏதோ காகிதத்தில் சில கணக்குகளை எழுதி வருவாய் கோட்டம் இல்லை, மக்கள்தொகை இல்லை,  வருவாய் கிராமங்கள் போதுமானதாக இல்லை என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாக்குபோக்கு சொல்லி தனி மாவட்ட கோரிக்கை தள்ளி வைக்கப்பட்டு வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தென்காசியில் அதிமுக சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று தனி மாவட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரண்டே வாரத்தில் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கையின் போது தனி மாவட்ட கோரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

3 வருவாய் கோட்டங்கள், 16 தாலுகாக்கள் என சிவகிரி முதல் திசையன்விளை வரை பரந்து விரிந்து காணப்பட்ட நெல்லை மாவட்டத்தில் அதன் பரந்த நிலப்பரப்பு காரணமாகவே பல்வேறு வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க முடியாத சூழல் நிலவியது.  மாவட்ட பிரிவினை மூலம் நெல்லை மட்டும் அல்ல புதிய மாவட்டமும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தமிழக வரலாற்றில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக அருகாமையில் உள்ள தூத்துக்குடி, அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.  தற்போது தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் தலைநகரமான தென்காசியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.  குறிப்பாக கலெக்டர் அலுவலகம்,  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம்,  மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள்,  பொதுப்பணித்துறை,  நெடுஞ்சாலைத் துறை,  மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளின் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள்,  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்,  சிறைத்துறை அலுவலகங்கள்,  பள்ளிக்கல்வித்துறை, கல்லூரிக் கல்வித்துறை அலுவலகங்கள் உள்ளிட்டவை தென்காசியில் புதிதாக அமைக்கப்படும். இதுதவிர இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியான இம்மாவட்டம் தமிழக சுற்றுலாத்துறையில் மேலும் சிறப்பிடம் பெற்று வளரும்.

புதிய திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும் பார்வையிடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி திட்டங்களை தீட்டுவதற்கும் அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும்.  புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் இன்னும் சிறப்படைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். தென்காசி தனி மாவட்ட அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக அமைப்பினர், பொதுநல அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், பல்வேறு சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


குரல் கொடுத்த ‘தினகரன்’

alignment=


தென்காசி தனி மாவட்டம் என்ற கோரிக்கை தொடர்பாக ‘தினகரன்’ நாளிதழ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. நெல்லை பெரிய மாவட்டமாக உள்ளதாலும், நிர்வாக வசதிக்காக தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக்க வேண்டும் என ‘தினகரன்’ நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களின் கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தது. கடந்த ஜன.27ம் தேதி ‘மக்களின் குரல்’ பகுதியில்  அரை பக்க கட்டுரை வெளியிடப்பட்டது. ‘தினகரன்’ நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது தனி மாவட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும்

தென்காசி தனி மாவட்ட அறிவிப்பு வெளியானது குறித்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ கூறியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம். சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தேன். சமீபத்தில் தென்காசிக்கு வருகை தந்த முதல்வர், தனி மாவட்ட கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அறிவித்திருந்தார்.

வெகுசீக்கிரத்திலேயே தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது 110 விதியின் கீழ் தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை, அது எவ்வளவு பெரிய வாக்குறுதியாக இருந்தாலும் நிறைவேற்றும் என்பதற்கு தனி மாவட்ட அறிவிப்பு ஒரு எடுத்துக்காட்டாகும், என்றார்.


தொடர் போராட்டத்துக்கு வெற்றி

வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன் கூறுகையில், 1986ம் ஆண்டு எம்ஜிஆர் நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கியபோதில் இருந்து தனி மாவட்ட கோரிக்கை விடுத்து வருகிறோம். மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட அறிவிப்பாக இருந்தாலும், இதனை வரவேற்கிறோம். 33 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தி வந்தோம். இதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அவரது கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரது தொகுதியில் போட்டியிட்டேன். தனி மாவட்ட அறிவிப்புடன் நின்றுவிடாமல் தனி அலுவலரை நியமித்து மாவட்ட பிரிவினைக்கான பணிகள், புதிய மாவட்டத்தின் எல்லைகள் இடம்பெற வேண்டிய தொகுதிகள், தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

எவை, எவை?


தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் தென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் என தெரிகிறது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சிவகிரி, வீ.கே.புதூர், ஆலங்குளம் சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.

சங்கரன்கோவில் தனி கோட்டம்

நெல்லை மாவட்டத்தில் தற்போது நெல்லை, சேரன்மகாதேவி, தென்காசி என 3 கோட்டங்கள் உள்ளன. தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்படும் போது தென்காசி கோட்டம் மட்டுமே அதனுடன் இடம் பெறும். எனவே நிர்வாக வசதிக்காக நெல்லை கோட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி ஆகிய தாலுகாக்களை பிரித்து சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி கோட்டம் உருவாக்கப்படும் என வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விரைவில்  தனி அலுவலர்

தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் எத்தனை கிராமங்கள், பிர்காக்கள், தாலுகாக்கள், கோட்டங்கள் இடம் பெறும் என்பது குறித்து இனி தான் முடிவு செய்யப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார். அதற்கு பிறகே தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் எங்கு கட்டலாம், அதற்கு தகுந்த இடங்கள், கையகப்படுத்த வேண்டிய நிலங்கள் குறித்து தனி அலுவலர் அரசுக்கு பரிந்துரைப்பார்.


Tags : Tenkasi , Tirunelveli, New District, TN Assembly, Edappadi Palanisami
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...