தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் மதுரையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ‘ஆறாக’ ஓடியது

மதுரை : தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் மதுரையில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்ததால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் ஓடியது அனைவரது மனதையும் வேதனைக்குள்ளாக்கியது. வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பொய்த்ததால் வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வாரம் மற்றும் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களிலும் அதுவும் கிடைப்பதில்லை.

 மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு  வழங்க வேண்டிய 115 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு பதிலாக 104 மில்லியன்  லிட்டர் தண்ணீரே கிடைத்து வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதியில் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது. நேற்று காலை மதுரை கோச்சடை அருகே முடக்குச்சாலை பகுதியில் பிரதான குடிநீர் குழாய் அழுத்தம் தாங்காமல் உடைந்தது. இதிலிருந்து குடிநீர் பெருக்கெடுத்து ஆறு போல சாலையில் ஓடியது.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் அஜாக்கிரதையால் குழாய் உடைந்ததில் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ளது. 500 மீட்டர் தூரத்திற்கு மேல் குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது அனைவரின் மனதையும் வேதனைக்கு ஆளாக்கியது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலங்களுக்கு வாகனங்களில் சென்றவர்கள் பரிதவித்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடைந்து போன குழாயை சரி செய்தனர். அதுவரை தண்ணீர் 2 மணிநேரத்துக்கும் மேலாக ஓடிக்கொண்டே இருந்தது. இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாபு கூறும்போது, ‘‘உயர் அழுத்தம் காரணமாகவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் எந்த வகையிலும் பாதிக்காது. குழாய் உடைப்பை விரைந்து சரி செய்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: