சேலம் அருகே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு பாதியில் நிறுத்தப்பட்ட கோயில் தேரோட்டம் மீண்டும் நடந்தது

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே தெடாவூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் தலைமை தாங்கும் பிரச்னையால் பாதியில் நிறுத்தப்பட்டது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று மீண்டும் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள மாரியம்மன்,செல்லியம்மன்,கூத்தாண்டவர் கோயிலில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.தேர் பழுதடைந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து,₹50 லட்சத்தில் தேர் புதுப்பிக்கப்பட்டு, இந்தாண்டு தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னோட்டமாக, கடந்த வாரம் தேர் வெள்ளோட்டம் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை புதுப்பிக்கப்பட்ட தேரில்,அம்மன் சிலையை வைத்து தேரோட்டம் தொடங்கியது. மாலை 6.30 மணியளவில் சுமார் 10 அடி தூரம் வந்த நிலையில், தேர்த்திருவிழாவை யார் தலைமையில் வழி நடத்துவது என்று மூன்று தரப்பினரிடையே போட்டி எழுந்தது. கோஷ்டி மோதல் அபாயத்தால் அதே இடத்தில் தேர் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,உடன்பாடு ஏற்படாததால் தேர்த்திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த பிரச்னை தொடர்பாக நேற்று கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கெங்கவல்லி தாசில்தார் சுந்தர்ராஜ்,இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஊர் தரப்பில் 10 பேர் கலந்து கொண்டனர்.மேலும், 24 கடைக்காரர்கள் மற்றும் ஊர் மூப்பர்,நாட்டார்,கவுண்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.இதில்,வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி தேர்த்திருவிழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி,தேர் மீது 2 பேர் நின்றவாறு மேற்பார்வை செய்வது, மற்றொருவர் தேரினை வழிநடத்திச்செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது.அதில்,தேர்த்திருவிழாவினை அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினாலோ,சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுத்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து,மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆண்டுதோறும் புதன்கிழமை தொடங்கும் தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறும். வெள்ளிக்கிழமை நிலைசேரும். தலைமை தாங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக ஒரு நாள் தேரோட்டம் நிறுத்தப்பட்டதால்,எஞ்சிய 2 நாள் விழா நடைபெறும்.திட்டமிட்டபடி நாளை (இன்று) தேர் நிலை சேர வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் முதல்நாள் விழாவின்போது தேரோட்ட விழாவில் பங்கேற்று வடம்பிடிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். தெடாவூரில் இருந்து வெளியூர்களில் தங்கியிருந்து பணியாற்றும் ஏராளமானோர் விழாவில் பங்கேற்பதற்காக தங்களது குடும்பத்தினரோடு சொந்த ஊர் வந்திருந்தனர்.ஆனால்,தேரோட்டத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டனர் இதனால்,நேற்று நடைபெற்ற விழாவில் குறைந்த அளவிலான மக்களே கலந்து கொண்டதால் தேரோட்டம் களையிழந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் டிஎஸ்பி ராஜூ தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள்,10 எஸ்.ஐ.க்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: