வறட்சியால் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுமா?

உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலாதலங்களான நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அரசின் சார்பில் கோடை விழாவும் கிருஷ்ணகிரியில் மாங்கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாதலமாக அமராவதி மற்றும் திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவியும், அடிவாரப்பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் அணையும் அமைந்துள்ளது.

 இந்நிலையில், உடுமலை,அமராவதி வனசரகங்களில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கொண்டாடும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் ஆடிபெருக்கு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி திருமூர்த்தி மலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவின் போது மாவட்ட நிர்வாகத்தின் ஒவ்வொரு துறை சார்பிலும் கண்காட்சி அரங்கு  அமைக்கப்படும்.

பள்ளி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை நடனம் ஆகியன நடைபெறும். மேலும் விழாவின் போது ஏழை,எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.

 இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் பஞ்சலிங்க அருவியில்  தண்ணீர் வரவில்லை. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 14 அடி மட்டுமே இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகளும் வேளாண் பணிகளை துவக்கவில்லை.

தண்ணீரின்றி தென்னைகள் கருகி வருவதால் விவசாயிகள் மனநிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடைபெறுமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: