×

தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 16 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

சென்னை: தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 16 பேரை 10 நாள் விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.

அன்சாரூல்லா என்ற தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக தமிழகத்தில் 2 பேரும் டெல்லியில் 14 பேரும் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேரும் கீழக்கரையையும், எஞ்சிய இருவர் நாகப்பட்டினத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து குண்டு  வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து  இலங்கை அரசு குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அளித்தது. அதைதொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கேரளா மற்றும் தமிழகத்தில்  நாகை, சென்னை, மதுரையில் உள்ள சிலருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை க்யூ பிரிவு போலீசார் கடந்த மே 12ம் தேதி  கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில்  இருந்து டெல்லி வந்த 14 பேரையும் அதிரடியாக விமான நிலையத்தில், நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்பதால் அதிகாரிகள் தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் 16 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அனுமதி கோரியுள்ளது.

Tags : NIA, petition, Ansarullah
× RELATED திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில்...