கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீதம் மாடுகள் விற்பனை

ஈரோடு :ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு 700 மாடுகள் வரத்தானது. இதில் 80சதவீதம் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மாகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வர்.

 இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மாட்டு சந்தைக்கு விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாடுகளை வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதில் விற்பனைக்கு கொண்டு வந்த மாடுகள் 80சதவீதம் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், நேற்று நடந்த சந்தைக்கு வழக்கம் போல் மாடுகள் வரத்தானது.

பசு மாடு 300, எருமை 200, கன்று 200 என 700 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் பசு மாடு ரூ.16ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.18ஆயிரம் முதல் ரூ. 36 ஆயிரம் வரையும், கன்று ரூ. 2ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. மாடுகளை வாங்க வழக்கம் போல் வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்ததால், 80சதவீதம் மாடுகள் விற்பனையானது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: