×

நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்ட பேரவையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சட்ட பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, பேசிய ஸ்டாலின் தேசிய மருத்துவர்கள் கழக (நெக்ஸ்ட்) மசோதாவை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில், நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

மேலும் மருத்துவப்படிப்புகள் முடியும் சமயத்தில் நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வுகளை அரசே எடுத்து நடத்தும் என தெரிவித்திருந்தது. அவ்வாறு, தேர்வுகள் நடத்தப்படுவது, மாநில அரசு கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கும் என்றும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு இயக்கக்கூடிய சூழல் ஏற்படும் என தெரிவித்தார். எனவே, நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். நெக்ஸ்ட் மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதில்:

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார். நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார். ஏற்கனவே, 2016ம் ஆண்டு தேசிய மருத்துவர்கள் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே, நாடாளுமன்றத்தில் அதிமுக இதனை எதிர்த்ததாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய கொள்கையை அரசு ஏற்றுக்கொள்வதாகவும், தேசிய  மருத்துவ கழக (நெக்ஸ்ட்) மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : Next choice, Stalin, law firm, special attention resolution
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...