'செங்கல்பட்டு, தென்காசி'தனி மாவட்டங்கள் எதிரொலி: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்

நாகை: செங்கல்பட்டு, தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில், இதேபோல் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதல்வர் 110 வீதியில் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெரிய மாவட்டங்களாக உள்ள திருநெல்வேலி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி இன்று முழு கடை போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு சங்கங்கள் கூட்டாக நேற்று அறிவித்திருந்தனர். சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கங்கள், மருத்துவர் சங்கம், வழக்கறிஞர் சங்கம் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், பொறையாறு, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், பெட்ரோல்பங், மருந்து கடைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படுமென மயிலாடுதுறை வர்த்தகசபை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை முதல் மயிலாடுதுறை தாலுக்கா, குத்தாலம் தாலுகா, தரங்கம்பாடி தாலுகா- வை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட கடைகள் ஒட்டு மொத்தமாக அடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேசிய வர்த்தக சபை தலைவர், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்ட 36வது மாவட்டம் என உடனடியாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2001-06ம் ஆண்டுகளில் மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்க சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், சுனாமி காரணமாக தடைப்பட்டதால், 2011ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், செங்கல்பட்டு, தென்காசியை அடுத்து மயிலாடுதுறையை தனிமவட்டமாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: