ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உட்பட எஸ்-400 ஏவுகணையை யார் வாங்கினாலும் எதிர்ப்போம்: பென்டகன் தகவல்

வாஷிங்டன்: ‘ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள், அதன் உபகரணங்களை எந்த நாடு வாங்கினாலும் அமெரிக்கா எதிர்க்கும்,’ என பென்டகன் எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், அது சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், கடந்தாண்டு அக்டோபரில் கையெழுத்தானது. இதற்கிடையே, ரஷ்யாவுடன் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டி வருகிறது. அதையும் மீறி ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியாவின் இந்த முடிவு குறித்து, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணை செயலாளர் டேவிட் டிராச்டன்பெர்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியா உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு பலமாக உள்ளது.

Advertising
Advertising

இதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை எந்த நாடு வாங்கினாலும் அதை அமெரிக்கா எதிர்க்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இது குறித்து இந்தியாவுக்கும் தகவல் அனுப்பி உள்ளோம்,’’ என்றார். எஸ்-400 ஏவுகணைகளையும், அது சார்ந்த தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களையும் , அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானத்தை தகர்க்கும் நோக்கத்திற்காக ரஷ்யா தயாரித்துள்ளது. எனவே, இந்த ஏவுகணையை கொள்முதல் செய்வதை அமெரிக்கா தீவிரமாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை துருக்கி வாங்கியதால், அந்நாட்டுக்கு எப்-35 போர் விமானத்தை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: