பதவி நீக்கம் செய்யக் கோரிய டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி

வாஷிங்டன்: அதிபர் டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தோல்வி அடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக்கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வரமுடியும். இந்த வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினரான அல்கிரின், இதற்கு முன் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யக்கோரி 2 முறை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதிநிதிகள் சபையில் டிரம்பை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை மீண்டும் அல்கிரின் கொண்டு வந்தார். பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலோர் உள்ள நிலையிலும் அல்கிரின் கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.

Advertising
Advertising

இந்த தீர்மானம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் கிடைத்தன. இது தொடர்பாக வடக்கு கரோலினாவில் பேரணியில் பங்கேற்க சென்றுள்ள அதிபர் டிரம்ப் கூறுகையில், `இந்த தீர்மானம் கேலிக்குரியது என விமர்சித்துள்ளார்.  அல்கிரின் கூறுகையில், ‘‘இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக நான் கருதவில்லை. கடந்த முறை 66 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது நாங்கள் 95 வாக்குகள் பெற்றுள்ளோம். இது எங்களுக்கு கூடுதல் பலமே,’’ என்றார். முன்னதாக, பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக பேசிய இந்திய வம்சாவளி எம்பி பிரமிளா, வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களித்தார்.

Related Stories: