சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் கோரிக்கை

புதுடெல்லி: ‘குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்,’ என பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (49), கடந்த 2017ம் ஆண்டு ஈரான் சென்றிருந்தார். அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், தீவிரவாத சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தியது பாகிஸ்தான். அவருக்கு இந்திய தூதரக உதவிகள் கிடைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அதில், வியன்னா ஒப்பந்தப்படி, குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரகம் அணுக பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் குவாவி அகமது யூசப் தலைமையிலான 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

அதில், ‘வியன்னா விதிமுறைகளை பாகிஸ்தான் மீறியுள்ளது. குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு இந்தியாவின் தூதரக உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும். குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பாகிஸ்தான் கட்டாயம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.  அதே நேரம், ‘பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாதவை இந்தியாவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்,’ என்ற இந்தியாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.  இந்த தீர்ப்பை பாகிஸ்தான் நீதிபதியை தவிர, சர்வதேச நீதிமன்றத்தின் மற்ற 14 நீதிபதிகளும் ஆதரித்தனர். இது, இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதையடுத்து, குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நேற்று அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

குல்பூஷன் ஜாதவை தொடர்பு கொள்ளும் உரிமை இந்திய தூதரகத்துக்கு மறுக்கப்பட்டதையும், அவருக்கு தேவையான சட்ட உதவிகள் இந்திய தூதரகத்திடம் இருந்து கிடைக்க பாகிஸ்தான் மறுத்ததையும் தவறு என சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. குல்பூஷன் ஜாதவ் ஒரு அப்பாவி. அவருக்கும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை. சட்ட பிரதிநிதி இல்லாமல், அவரிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.  இதனால், குல்பூஷன் ஜாதவை உடனடியாக விடுவிக்க வேண்டும் பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் இந்தியா சார்பில் ஆஜரான வக்கீல் ஹரிஸ் சால்வே, திறம்பட வாதிட்டார். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது உட்பட, ஜாதவை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவுக்கும், ஜாதவுக்கும் மட்டுமல்ல; சர்வதேச சட்ட விதிமுறைகள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜாதவை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்: இம்ரான்கான் பிடிவாதம்

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘கமாண்டர் குல்பூஷன் ஜாதவை விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப  வேண்டாம் என சர்வதேச நீதிமன்றம் எடுத்துள்ள முடிவை பாராட்டுகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக அவர் குற்றம் புரிந்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் சட்டப்படி மேற்கொள்ளும்,’ என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறுகையில், ‘‘ஜாதவ் பாகிஸ்தானில் தொடர்ந்து இருப்பார். பாகிஸ்தான் சட்டப்படி அவர் நடத்தப்படுவார். இந்த தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி. ஜாதவை விடுவிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது. அது, ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா கூறியது. அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் வெற்றி என இந்தியா கூறினால்... குட்லக்,’’ என கூறியுள்ளார்.

Related Stories: