பண பரிமாற்ற முறைகேடு வழக்கு அமலாக்கத்துறை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் ராபர்ட் வதேரா

புதுடெல்லி: பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு தடை விதிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ராபர்ட் வதேரா வாபஸ் பெற்றார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்  சகோதரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, சட்ட விரோத பணப்  பரிமாற்றத்தின் மூலம் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி  இருப்பதாக அமலாக்கத் துறை  குற்றச்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது,  நிதி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து  வருகிறது. வதேராவின், ‘ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலட்டி எல்எல்பி’ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அரோரா,  இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று, ராபர்ட் வதேரா பலமுறை விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்து வருகிறார். தன் மீது அரசியல் உள்நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி வரும்  அவர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என அமலாக்கத் துறைக்கு தடை விதிக்கும்படி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

 நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா தின்கரா சேகல் அமர்வு முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றம் தனக்கு ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கி இருப்பதால், அமலாக்கத் துறைக்கு எதிராக  தொடர்ந்த தனது மனுவை வாபஸ் பெறுவதாக வதேரா புதிய மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வதேராவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.அதே நேரம், நிதி முறைகேடு சட்டத்தின் பல்வேறு சட்டப் பிரிவுகள் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிராக இருப்பதால், அவற்றை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியும், ஒரே வழக்கில் தன் மீது பல்வேறு விதமான வழக்குகளை  அமலாக்கத் துறை பதிவு செய்து இருப்பதாகவும் குற்றம்சாட்டி வதேரா தொடர்ந்துள்ள வழக்கில், அமலாக்கப் பிரிவு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும்படி வதேராவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதன் விசாரணையை  ஆகஸ்ட் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: