×

அகமதாபாத் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுவர், சிறுமியர் உட்பட 55 பேர் மீட்பு: கொத்தடிமையாக்க முயற்சியா?

திருமலை: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. இந்த ரயில் நள்ளிரவு 12 மணியளவில் தெலங்கானா மாநிலம், கம்மம் ரயில் நிலையம்  அருகே வந்தது. அப்போது, ரயிலில் பயணித்த சிறுவர், சிறுமிகளை கொத்தடிமைகளாக்க சிலர் அழைத்து செல்வதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்மம் ரயில்வே பாதுகாப்பு படை, மாநில ரயில்வே போலீசார்,  குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கம்மம் ரயில் நிலையத்திற்கு வந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.அப்போது, பொதுப்பெட்டியில் 16 சிறுவர்கள், 12 சிறுமிகள் உட்பட 55 பேர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிறுவர்கள் எந்த பதிலும் தெரிவிக்காமல் அச்சத்துடன் இருந்தனர். பெரியவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின்  முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ரயில் நிலைய அதிகாரிகளிடம் பேசி ரயிலை சிறிது நேரம் நிறுத்தி 55 பேரையும் கீழே இறக்கி ரயில் நிலையத்தில் தங்க வைத்தனர்.இவர்கள் குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொத்தடிமைகளாக பணிபுரிவதற்கு சென்னையில் இருந்து அழைத்து செல்லப்படுகிறார்களா? அல்லது சென்னையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து தற்போது சொந்த ஊருக்கு  செல்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.மேலும், 16 சிறுவர்கள் மற்றும் 12 சிறுமிகளை கம்மம் குழந்தைகள் நலத்துறை விடுதியில் போலீசார் சேர்த்தனர். மீதமுள்ள பெண்கள், ஆண்களிடம் கம்மம் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ahmedabad,children , attempt , demolish?
× RELATED தூத்துக்குடி அருகே சீல் வைக்கப்பட்ட...