விழுப்புரம், தூத்துக்குடியில் கோர விபத்து தொழிலாளர், பக்தர்கள் உட்பட 16 பேர் பலி

* ஆம்னி பஸ்-டெம்போ நேருக்கு நேர் மோதல் * 20 அடி பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கிய வேன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நேற்று அதிகாலை ஆம்னி பஸ்சும், மினி டெம்போவும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் இறந்தனர். தூத்துக்குடியில், மேம்பால தடுப்பு சுவரை உடைத்துகொண்டு 20 அடி பள்ளத்தில்  கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகினர்.

கோவையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் 24 பயணிகளுடன்  நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பேருந்தை தென்காசி அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன்(56) ஓட்டிச்சென்றார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த  ரவிச்சந்திரன்(38) இருந்தார். இதுபோல், செங்கல்பட்டு அருகே உத்திரமேரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு மின்கம்பம் நடுவதற்காக ஒப்பந்ததாரர் தானேஸ்வரன் அழைப்பின்பேரில் மினிடெம்போவில் 13 தொழிலாளர்கள்  சென்றனர். மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த தங்கராஜ் (33) மினி டெம்போவை ஓட்டி சென்றார்.நேற்று அதிகாலை 2.45 மணியளவில், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலையில் வந்தபோது ஆம்னி பஸ்சும், மினி டெம்போவும் நேருக்குநேர் மோதியது. இதில் மினி டெம்போ அப்பளம்போல் நொறுங்கியது. ஆம்னி  பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி மினிடெம்போ டிரைவர் தங்கராஜ், பஸ் டிரைவர் ராஜேந்திரன் (56), டெம்போவில் வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாரூர்ரஜாக்(30), அனோஜ்குமார்(20), ஜம்மன்ரஜாக்  (28), சேட்டுகுமார் (23), ராஜ்குனியா (30), அனோஜ்முனியா (35) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மினிடெம்போவில் உயிருக்கு போராடிய தொழிலாளர்கள், பஸ்சின் மாற்று  டிரைவர் ரவிச்சந்திரன் உட்பட 8  பேரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தொழிலாளர்கள் முகேந்தர்புனியா(35), அசோக் (27) ஆகியோர் இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர. மாற்று ஏற்பாடு: ஆம்னி பஸ்சில் வந்த  24 பயணிகளையும் போலீசார் மாற்று பஸ் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் பார்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு  அறிவுறுத்தினார்.தூத்துக்குடி அருகே 6 பேர் சாவு: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பாண்டியன் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் அருணாசலபாண்டி (35). இவர் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு  கவுசல்யா (22) என்ற மனைவியும் 3 மாதத்தில் அனிஸ்பாண்டி என்ற குழந்தையும் உண்டு.  திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அருணாசலபாண்டி, மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திருத்தங்கலில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை  திருத்தங்கலை சேர்ந்த முருகேசன் (45) ஓட்டி சென்றார்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அடுத்த வாய்க்கால் பாலத்தில் வேன் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 20 அடி  பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்தது. இதில் வேன் நொறுங்கி இடிபாடுகளில் சிக்கி சுகுமாறன் மகன் ஜெகதீஸ்வரன் (12), அருணாசலபாண்டி, குழந்தை அனிஸ்பாண்டி, காசிராஜன் மனைவி பாக்கியலட்சுமி (46), ராமர் மனைவி முத்துலட்சுமி (65),  கோபாலகிருஷ்ணன் மகன் நித்திஷ் (4) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவல் அறிந்து, வைகுண்டம் போலீசார், தீயணைப்பு படையினர் வந்து படுகாயமடைந்த டிரைவர் முருகேசன் மற்றும் செந்தில்குமார் (28), இவரது மனைவி செண்பகலட்சுமி உள்ளிட்ட 10 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், டிரைவர் தூங்கியதே விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இறு ேவறு சம்பவத்தில் ஒரே நாள் அதிகாலையில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: