காங்., சமாஜ்வாடி எம்பி.க்கள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கோரி காங்கிரஸ், சமாஜ்வாடி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.  

 மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா எழுந்து, கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவது குறித்து அலுவல் நேரத்தை ஒத்திவைத்து விட்டு உடனடியாக விவாதிக்க அனுமதிக்கும்படி சமாஜ்வாடி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் வலியுறுத்தினார். இவற்றுக்கு அனுமதி மறுத்த அவை தலைவர் வெங்கையா நாயுடு, பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள   குல்பூஷன் யாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேசும்படி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், சமாஜ்வாடி எம்பி.க்கள், தாங்கள் எழுப்பிய பிரச்னைகளை பற்றி முதலில் விவாதிக்க அனுமதிக்கும்படி அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். முன்னதாக பேசிய ஆனந்த் சர்மா, ‘‘கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ்- மஜத  எம்எல்ஏ.க்கள் 15 பேரின் வழக்கில், சட்டப் பேரவைக்கு அவர்கள் வருவதற்கு யாரும் கட்டயாப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்தை மீறியது என்பது தெளிவாக தெரிகிறது. அரசியலமைப்பின் 10வது பிரிவின்படி, ஒரு எம்எல்ஏ.வோ அல்லது எம்பி.யோ கட்சி நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தாலோ அல்லது வாக்களிப்பதை தவிர்த்தாலோ தகுதி நீக்கம் செய்யலாம். இது ெதாடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும்,’’ என்றார்.

இதற்கு பதிலளித்த அவை தலைவர் வெங்கையா நாயுடு, “இந்த விவாதம்  தொடர்பான முடிவை பிறகு தெரிவிக்கிறேன்,” என்றார். மேலும், இப்பிரச்னை பற்றி மேலும் பேச, ஆனந்த் சர்மாவுக்கு அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி.க்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.அதேபோல், சமாஜ்வாடி எம்பி ராம்கோபால் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் 10 தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். இம்மாநிலத்தில் காட்டாட்சி நடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு, 267வது விதியின் கீழ் வெங்கையா அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாடி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதை பார்த்த வெங்கையா, “இது சரியான வழியல்ல. உங்கள் இருக்கைக்கு செல்லுங்கள், உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்,” என்றார். அதன் பிறகும் காங்கிரஸ், சமாஜ்வாடி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை 12 மணி வரை ஒத்திவைத்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

Related Stories: