4வது பெரிய மாநிலமாக இருந்து சரிந்தது தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 3ல் ஒரு பங்காக குறைய காரணம் என்ன?: மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: ‘‘தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 3ல் ஒரு பங்காக குறைய காரணம் என்ன? இதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’’ என்று மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி கேட்ட கேள்விகளுக்கு மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் தான்வே தாதாராவ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி குறைந்தது தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதன் விவரம்:சர்க்கரை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் அனைத்தும் செல்வதை தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் சுட்டுக் காட்டியதா? அப்படி என்றால், அதன் விவரம் என்ன, இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும். கரும்பு உற்பத்தி குறைந்ததன் காரணமாக, தமிழக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி 35 சதவீதமாக குறைந்ததா? தமிழகத்தின் சர்க்கரை தேவை 18 லட்சம் டன்னாக இருக்கும்போது, தமிழகத்தின் உற்பத்தி 8.5 லட்சம் டன்னாக உள்ளது. இதனால் தமிழக சர்க்கை ஆலைகள் ஏற்றுமதி செய்ய முடியாதா? இந்த நிலைக்கான காரணங்கள் என்ன? 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 23 லட்சம் டன்னாக இருந்து, சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் 3 அல்லது 4வது இடத்தில் இருந்தது உண்மையா? தற்போது தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்ததற்கு காரணங்கள் என்ன? இதை சரி செய்ய மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு அமைச்சர் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் தான்வே தாதாராவ் அளித்துள்ள பதில்:நாட்டில் சர்க்கரை உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசின் உதவி திட்டங்கள் சமமாக பொருந்தும். தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளின் பிரச்னைகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் நிலவிய வறட்சி, மழை பொய்தது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது போன்றவை காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்தது. இதனால் சர்க்கரை உற்பத்தியும் குறைந்தது. கடந்த 2011-12ம் ஆண்டில் தமிழகத்தின் கரும்பு உற்பத்தி 23.79 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. கரும்பு உற்பத்தியில் நாட்டிலேயே 4வது பெரிய மாநிலமாக தமிழகம் இருந்தது. மேலே தெரிவிக்கப்பட்ட காரணங்களால் 2018-19ம் ஆண்டில் கரும்பு உற்பத்தி 7.24 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்தது. வர்த்தக பயிர்-தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் (என்எப்எஸ்எம்-(சிசி) கீழ் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 2014-15ம் ஆண்டிலிருந்து, இதுவரை ரூ.204.11 லட்சம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: