பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க குழு: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை: பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க ஏற்படுத்தப்பட்ட குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் நல வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.  சட்டப் பேரவையில் நேற்று செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பெரம்பலூர் தமிழ்செல்வன்(அதிமுக) பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி அவர்களுக்கென்று பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.  அதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: ஊடகத் துறையினர்  ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்குகிறார்கள்.  எங்கள் அரசு  ஊடகத் துறையின் நலனை என்றுமே கண்ணியத்தோடு காத்து வருகிறது. பல்வேறு சலுகைகளை பத்திரிகையாளர்களுக்கு  தொடர்ந்து வழங்கி வருகிறது.   

பத்திரிகையாளர் ஓய்வூதியம், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம், பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப  உதவி நிதியுடன் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சலுகைக் கட்டணத்தில்  வீட்டுமனை, அரசு வாடகை குடியிருப்பு ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்கள். பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து,  அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும். அதாவது, முதன்மைச் செயலாளர்,   நிதித்துறை -தலைவராகவும், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை-    செயலாளராகவும், இயக்குநர், செய்திமக்கள் தொடர்புத்துறை -உறுப்பினராகவும், ஆணையர், தொழிலாளர் நலத்துறை-உறுப்பினராகவும் இருப்பார்கள்.  இக்குழு பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து, அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, அறிக்கை தரும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories: