×

கூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு

புதுடெல்லி: சர்வதேச சந்தை நிலவரங்கள் ஊக்கம் அளிப்பதாக இல்லாததாலும் அன்னிய முதலீடுகள் அதிக அளவில் திரும்பப் பெற்றதாலும் ஏற்பட்ட  பீதியில் மும்பை பங்குச்சந்தையிலும் தேசிய பங்குச்சந்தையிலும்  முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். இதனால், தங்களிடம் இருந்த பங்குகளை விற்பதில் கவனம் செலுத்தினர். இந்த களேபரத்தால் 2 பங்குச்சந்தைகளிலும் புள்ளிகள் சரிவு என்பது தவிர்க்க முடியதாததாகிவிட்டது. மும்பை பங்குச் சந்தை  (சென்செக்ஸ்) 318 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் (நிப்டி) வர்த்தகம் 91 புள்ளிகள் சரிந்தது. மொத்தம் 11,597 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தையில் 30 பங்குகளில் 25 பங்குகளின் விலை சரிவை சந்தித்தன. எஸ் பாங்க், ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் ஆகிய பங்குகளின் விலை அதிகபட்சம் 12.85 சதவீதம் வரை  சரிவை சந்தித்தன.

 எச்டிஎப்சி, கோடக் பாங்க், எச்டிஎப்சி பாங்க், பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி ஆகிய  பங்குகளின் விலை ஏற்றம் பெற்றன. நிப்டியிலும் சிறிது சரிவு காணப்பட்டது. அந்நிய முதலீடுகள் திடீரென வெளியேற்றப்பட்டதால், உள்நாட்டு சந்தை  முதலீட்டாளர்களிடமும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தையில் திடீர் சரிவு ஏற்பட்டதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2 கோடி முதல் 5 கோடி வரையிலான வருவாய் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியாக 25 சதவீதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல் 5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 37 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது என  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் இதுவரை 5,673 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். 13 வர்த்தக நாட்களில் 11 நாட்கள் முதலீடுகள் அதிகமாக  வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Panic , Leveraged , stock markets
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...