அத்தி வரதரை காண வரும் மக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்ய தவறிய அரசு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: அத்தி வரதரை காண வரும் மக்களுக்கு பாதுகாப்பு, பொதுக்கழிப்பிட வசதி போன்றவற்றை முறையாக செய்திடாத நிலையில் ஆளும் அரசு இருக்கிறது என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க சென்ற மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலால் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணத்தொகை வழங்குவது குறித்து பேசியதாவது: காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் 40 ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரக்கூடிய வகையில் தொடர்ந்து காட்சி தருகிறார்.

ஆனால் இந்த ஆண்டு, மக்கள் மிகப்பெரிய அளவில் நிரம்பகூடக் கூடிய வகையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த விழாவைக் காண்பதற்கும், உற்சவத்தை கண்டு ரசிக்கவும் பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் மக்கள் திரள்வதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. அங்கு வந்து செல்லக்கூடியவர்களுக்கு முறையான பாதுகாப்பு - பொதுக்கழிப்பிடங்கள் போன்ற வசதிகள் இல்லையென்ற நிலை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். இன்று (நேற்று) காலையில் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 31 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்திருக்கக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், அதில் 3 பேர் அல்லது 4 பேர் இறந்திருப்பதாகவும். இன்னும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. எனவே, இந்த செய்தி அரசிற்கு வந்திருக்கிறதா? நான் கேட்க விரும்புவது, இன்னும் அதிகமான அளவிற்குத்தான் கூட்டம் வரப்போகிறது. நம்முடைய தமிழகத்திலிருந்து மட்டுமல்ல பக்கத்தில் இருக்கக்கூடிய மாநிலங்களிலிருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. எனவே, அதற்குரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்கிட வேண்டும் என்று கேட்டு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக உதவித்தொகையை - நிவாரணத்தொகையை இந்த அரசு வழங்குமா? இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: