தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், 1956ல் மாற்றம் கொண்டுவந்து ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் சட்ட முன்வடிவு 2017ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எம்பிபிஎஸ்., படிப்பு முடித்தவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற உரிமம் பெறுவதற்கு தேசிய அளவிலான தேர்வு எழுத வேண்டும் என்று இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் புதிய மக்களவையில்  இச்சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் வலியுறுத்தி இருக்கிறது. அதன்படி எம்பிபிஎஸ் படிப்பை முடித்த மாணவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, எம்பிபிஎஸ், இறுதித் தேர்வு, தேசிய வெளியேறும் தேர்வு (நெக்ஸ்ட்) என்ற பெயரில் நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படும். இந்த இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு ‘நீட்’ எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த உரிமையைப் பறிக்கும் வகையில்தான் ‘நிதி ஆயோக்’ பரிந்துரையின்படி பா.ஜ. அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஜூலை 17ல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளது.‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் பயிற்சி மருத்துவராக முடியாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். நீட் பயிற்சி மையங்கள் போல இதற்கான பயிற்சி மையங்களும் புற்றீசலாக கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். மேலும், மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுவிடும். மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், நெக்ஸ்ட் எனப்படும் ‘தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை பாஜ அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: