×

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் தகராறு பெண் வியாபாரி அடித்து படுகொலை

* இரும்பு ராடு, தலையணையால் அழுத்தி கொன்றனர்
* உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து மதுராந்தகம் கிணற்றில் வீசினர்
* இறந்தவரின் நகை திருடி ரூ.1.20 லட்சத்துக்கு அடகு வைத்தனர்
சென்னை: கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இட்லி மாவு பெண் வியாபாரியை தலையணையால் முகத்தை அழுத்தி இரும்பு ராடால் அடித்து கொலை செய்த 2 பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் 4வது தெருவை சேர்ந்தவர் இருதயநாதன்(50). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், தனது மனைவி அல்போன்சா மேரியுடன்(43).  ெசன்னை ராயப்பேட்டையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை கிடையாது. இருதயநாதன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அல்போன்சா மேரி வீட்டின் முன்பு இட்லி மாவு விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். இட்லி மாவு வியாபாரத்துடன் அல்போன்சா மேரி கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அல்போன்சா மேரி பகல் 12.30 மணிக்கு மெரினா கலங்கரை விளக்கு அருகே மீன் வாங்க சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர்வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

உடனே அவரது மனைவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இருதயநாதன் மாயமான மனைவி குறித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் மறு நாள் புகார் அளித்தார். இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெண் உடலை மதுராந்தகம் மருத்துமனைக்கு அனுப்பினர்.
மேலும், பெண்ணின் புகைப்படத்தை வைத்து கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் காவல் நிலையத்தில் மாயமான பெண்கள் குறித்த வழக்குகளை மாநில குற்ற ஆவண காப்பக போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பெண் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனே மதுராந்தகம் போலீசார் சம்பவம் குறித்து ஐஸ் அவுஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி இணை கமிஷனர் சுதாகர் உத்தரவுப்படி ஐஸ்அவுஸ் போலீசார், அல்போன்சா மேரி செல்போன் எண்ணில் கடைசியாக பேசிய நபர் குறித்தும், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்..

அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அல்போன்சா மேரி கடந்த 15ம் தேதி மீன் வாங்க கடற்கரைக்கு செல்லும் போது ராயப்பேட்டை வி.எம். 2வது தெருவை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் வள்ளி(36) என்பவர் அல்போன்சா மேரியை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் வள்ளியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதே பகுதியை ேசர்ந்த தேவி(32) மற்றும் பழ வியாபாரம் செய்து வரும் தேவியின் கணவர் மணி(எ) மணிகண்டன்(34) மற்றும் கிண்டி தொழிற்பேட்டையில் இரும்பு கம்பி வெட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுரேஷ்(32) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் பையில் அடைத்து ஆட்டோவில் எடுத்து சென்று மதுராந்தகம் அருகே கிணற்றில் விசியது தெரியவந்தது. இதையடுத்து ஐஸ் அவுஸ் போலீசார் அல்போன்சா மேரியை கொலை செய்த வள்ளி, தேவி, தேவியின் கணவர் மணி மற்றும் சுரேஷ் ஆகியோரை அதிரடியாக ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அல்போன்சா மேரியை  கொலை ெசய்தது எப்படி என்று போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் : அல்போன்சா மேரி தனது வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வந்தார். அவரிடம் வள்ளி மற்றும் தேவி வாரத்திற்கு 4 நாட்கள் இட்லி மாவு வாங்கி வந்தனர். அந்த வகையில் அல்போன்சா மேரிக்கு இருவரும் அறிமுகம் ஆனார்கள். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், வள்ளி, அல்போன்சா மேரியிடம் ₹20 ஆயிரம் பணம் வாங்கினார். அதேபோல் தேவி தனது கணவரின் பழக்கடையை விரிவுப்படுத்த கணவர் மணி உடன் சேர்ந்து ₹60 ஆயிரம் பணம் கடந்தாண்டு வட்டிக்கு வாங்கினர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய இருவரும் தினமும் சரியாக பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதனால் அல்போன்சா மேரி கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்தார். வாங்கிய கடனுக்கு பாதி அளவு பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அல்போன்சா மேரி பார்க்கும் இடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் அசிங்கமாக பேசி பணத்தை கேட்டு வந்தார். இதனால் அவர் மீது இருவரும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.இதனால் மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டி. அதன்படி கடந்த 15ம் தேதி மதியம் வள்ளி, அல்போன்சா மேரிக்கு போன் செய்து வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி தருகிறோம் என்று அவரது வீட்டிற்கு அழைத்துள்ளனர். மீன் வாங்க சென்ற அல்போன்சா மேரி நேராக வள்ளி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வள்ளி வீட்டில் திட்டமிட்டப்படி தேவி, அவரது கணவர் மணி ஆகியோர் இருந்தனர். அல்போன்சா மேரி வீட்டிற்கு வந்ததும் கடனுக்காக பார்க்கிற இடங்களில் எல்லாம் எங்களை அசிங்கப்படுத்துவியா என்று கேட்டுள்ளனர். இதனால் அல்போன்சாவுக்கும் வள்ளி மற்றும் தேவிக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தேவியின் கணவர் அல்போன்சா மேரியை படுக்கை அறைக்கு இழத்து சென்றார். அப்போது அவர் சத்தம் போட்டதால் மணி அல்போன்சா மேரி தலையில் ஓங்கி இரும்பு ராடால் அடித்துள்ளார். இதில் நிலை குலைந்த அல்போன்சா மேரியின் கைகளை வள்ளியும், இரண்டு கால்களை செய்துள்ளனர்.

பின்னர் அல்போன்சா மேரி இறந்ததை உறுதி செய்து கொண்டு மூன்று பேரும், அல்போன்சா அணிந்து இருந்த கம்மல், மூக்குத்தி, தாலி செயின் என 8 சவரன் மதிப்புள்ள நகைகளை பிறித்து கொண்டனர். பிறகு உடலை அருகில் வீசினால் மாட்டி கொள்வோம் என்று 15ம் தேதி இரவு வரை வள்ளி வீட்டில் அல்போன்சா மேரி உடலை கை மற்றும் கால்களை கட்டி ஒரு பிளாஸ்டிக் ைபயில் கட்டி வைத்துள்ளனர். பிறகு மணி தனது நண்பர் சுரேஷ் என்பரை வள்ளி வீட்டிற்கு வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறி உதவும் படி கேட்டுள்ளனர். இதற்கான ₹50 அயிரம் பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். நண்பருக்காக சுரேஷ் உடலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த உதவி செய்வதாக கூறினர். இதற்காக ராயப்பேட்டை முத்தையா தோட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரிடம் சுரேஷ் மற்றும் மணி ஆகியோர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதாக ஆட்டோவை கடன் வாங்கி வந்துள்ளார்.பணத்திற்கு ஆசைப்பட்ட சுரேஷ் நண்பர் மணியுடன் சேர்ந்து அன்று இரவு அல்போன்சா மேரி உடலை ஆட்டோவில் ஏற்றி கொண்டு திண்டிவனம் நோக்கி சென்றனர். செல்லும் வழியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி உடலை வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் மதுராந்தகம் வரை சாலையோரங்களில் ஆட்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நடமாட்டம் இருந்ததால் உடலை வீசி முடியவில்லை.

பிறகு மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் உள்ள கிணற்றில் யாருக்கும் சந்தேகம் வராதபடி உடலை வீசிவிட்டு வந்து விட்டனர். மறுநாள் 4 பேரும் அல்போன்சாவின் நகைகளை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ₹1.20 லட்சத்திற்கு அடகு வைத்து பணத்தை பெற்றனர். பிறகு சொன்னபடி சுரேசுக்கு ₹50 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள ₹70 ஆயிரம் பணத்தை வள்ளி மற்றும் தேவி, மணி ஆகியோர் பிரித்து கொண்டனர். வெகு தொலைவில் உடலை வீசிவிட்டு வந்தால் யாரும் நம்மை பிடிக்க முடியாது என்று நினைத்துள்ளனர். ஆனால் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா மூலம் அனைவரும் சிக்கி கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Woman,trader murdered,after, paying,dispute
× RELATED திருப்பூரில் சாலையோர தள்ளுவண்டி...