தமிழகத்தில் அதிகமான சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக) பேசியதாவது: காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரி துவங்க அரசு முன்வர வேண்டும். பல்வேறு சட்டக்கல்லூரிகள் தேவைப்படுகின்ற, இந்த காலக்கட்டத்தில், சென்னையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருக்கிற காரணத்தால் தேவை இருக்கிறது. எனவே, அதை பரிசீலித்து சட்டக்கல்லூரியை தொடங்க வேண்டும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: எதிர்காலத்தில் அங்கே சட்டக்கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி இயக்குனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றால், மாணவர்களின் தேவை இருக்கும் பட்சத்தில், அங்கே அவசியம் அமைய வேண்டும் என்று இயக்குனரிடமிருந்து பரிந்துரை பெறப்பட்டால் உறுப்பினர் கோரிக்கை கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

சி.வி.எம்.பி.எழிலரசன்: 2012ம் ஆண்டு 2484 பேர் தமிழ்நாட்டில் சட்டம் பயின்றிருக்கிறார்கள். 1760 பேர் வெளிமாநிலங்களில் இருந்து சட்டம் பயின்று வந்து இங்கே பதிவு செய்கிறார்கள். 2013ல் 1822 பேர் தமிழ்நாட்டில் சட்டப்படிப்பை பெற்றிருக்கிறார்கள். 1603 பேர் வெளிமாநிலத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள். 2014ம் ஆண்டு 2191 பேர் தமிழ்நாட்டில் இருந்து பயின்றிருக்கிறார்கள். 1631 பேர் வெளிமாநிலத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் இன்னும் நீண்டு கொண்டே போகிறது. இது எதை காட்டுகிறது என்று சொன்னால், தமிழ்நாட்டில் பதிவு செய்யக்கூடிய வழக்கறிஞர்களில் சரிபாதி அளவிற்கு வெளிமாநிலங்களில் பயின்று வரக்கூடிய நிலை இருக்கிறது.தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் 8ம், அரசு சட்டக்கல்லூரிகள் 12ம் சேர்த்து 20 இருக்கிறது என்று அமைச்சர் சொன்னார். உண்மைதான்.

ஆனால், கர்நாடகாவில் 93 சட்டக்கல்லூரிகளும், ஆந்திரபிரதேசத்தில் 37 சட்டக்கல்லூரிகளும் இன்றைக்கு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அதிகமான சட்டக்கல்லூரிகளை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு முன்வரவேண்டும். காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்கான இட ஒதுக்கீடு முடிந்து விட்டது. அதற்கான நிதியை ஒதுக்கிடு செய்து இந்த ஆண்டே நிறைவேற்றி தர வேண்டும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழக முதல்வர் எந்த அரசும் செய்யாத அளவிற்கு ஒரே ஆண்டிலேயே 3 சட்டக்கல்லூரிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

Related Stories: