×

கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி எதிரொலி குமாரசாமிக்கு கவர்னர் கெடு: இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் குமாரசாமி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் விவாதத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதத்தின் மீது விரைந்து முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது  என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை பங்கேற்க கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இடைக்கால தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவை நேற்று கூடியது. ஏற்கனவே அறிவித்தபடி சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன் மீது பேசிய முதல்வர் குமாரசாமி, ‘‘எனக்கு அதிகாரம் மீது பற்றில்லை. பதவி நிரந்தரமல்ல என உணர்ந்துள்ளேன். கூட்டணி அரசின் 13 மாத சாதனையை மக்களிடம் பேரவை மூலம் கொண்டு செல்ல கடமைபட்டுள்ளேன். எனவே கால அவகாசம் பார்க்காமல் விரிவான விவாதத்துக்கு சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார். முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சித்தராமையா எழுந்து, ‘பாயின்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். அதற்கு சபாநாயகர் அனுமதியளித்ததும், அவர் பேசியதாவது: அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது என்னை பிரதிவாதியாக சேர்க்கவில்லை. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பில், அதிருப்தி எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். நான் அதில் சம்பந்தப்படாத நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற தலைவராகவும், கொறடாவாகவும் எங்கள் எம்எல்ஏக்களுக்கு பேரவையில் பங்கேற்க உத்தரவிட்டுள்ளேன். ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் பேரவைக்கு வரவில்லை. இதன் மீது கொறடாவாக நான் நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும்.

எனவே உச்ச நீதிமன்றம் முழு தீர்ப்பை வழங்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார். இதற்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதற்கிடையில், சித்தராமையா கூறிய சட்டச்சிக்கல் பிரச்னையை அரசு வக்கீலுடன் ஆலோசித்த சபாநாயகர், அது குறித்து விளக்கம் பெற உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு சபை கூடியதும், அமைச்சர் டி.கே.சிவகுமார் எழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்த்குமாரை பாஜவினர் ரிசார்ட்டில் இருந்து மும்பைக்கு கடத்திவிட்டனர் என்று புகைப்பட ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ்குண்டுராவ், ‘‘எம்எல்ஏ சீமந்த்குமார் ஆபத்தில் இருக்கிறார். அவரை  காப்பாற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.  இதுகுறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘‘காங்கிரஸ் எம்எல்ஏ சீமந்த்குமார்  மும்பையில் இருந்து பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். ஆனால் அந்த கடிதம் மீது சந்தேகம் எழுகிறது. எனவே இதுகுறித்து உள்துறை அமைச்சர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறேன்’’ என்றார்.

இதையடுத்து, பாஜ உறுப்பினர்கள் எழுந்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். பாஜ உறுப்பினர், கோவிந்தகார்ஜோள் பேசுகையில், ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க திட்டமிட்டு காங்கிரசார் நாடகமாடுகின்றனர். இதை ஏற்க முடியாது. எவ்வளவு நேரமானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தி முடிக்க வேண்டும்’’ என்று கூச்சலிட்டார். இவருக்கு ஆதரவாக பாஜ உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால், காங்கிரசார்-மஜத-பாஜ உறுப்பினரிடையே அவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபாநாயகர் அவையை மூன்றாவது முறையாக ஒத்திவைத்தார். மீண்டும் 10 நிமிடம் கழித்து அவை கூடியதும், பாஜவினர் தங்கள் கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரசார் சம்மதிக்காததால் மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை நாளை(இன்று) காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துவிட்டு எழுந்து சென்றார்.

சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மறுத்த, பாஜ உறுப்பினர்கள் அனைவரும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பேரவையிலேயே இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விதானசவுதாவில் பரபரப்பு ஏற்பட்ட.து. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆளுநரை நேற்றிரவு சந்தித்தனர். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு  உத்தரவிடக் கோரி மனு அளித்தனர். அதை பரிசீலித்த ஆளுநர், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும்படி குமாரசாமிக்கு உத்தரவிட்டு, கடிதம் எழுதியுள்ளார்.


பாஜ ஆட்சி உறுதி எடியூரப்பா நம்பிக்கை
பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள செல்வதற்கு முன் பாஜ தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘முதல்வர் குமாரசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. கூட்டணி அரசு வீழ்த்தப்படுவது உறுதி. என்னதான் குறுக்கு வழியில் சதிகளை செய்தாலும் இவர்களின் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள முடியாது. கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைப்பது நூற்றுக்கு நூறு உண்மை. பாஜவினர் 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். இதனுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் பாஜவுக்கு ஆதரவு அளிப்பதால் பாஜவின் பலம் 107ஆக அதிகரிக்கும்’’ என்றார்.



Tags : Karnataka,Legislative Council Election, Action , vote , confidence, 1.30 pm
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...