×

குல்பூஷனை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்: வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

புதுடெல்லி: குல்பூஷன் ஜாதவுக்கு உடனடியாக விடுதலை கிடைக்கவும், அவருடைய நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். குல்புஷன் ஜாதவ் வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அறிக்கையை தாக்கல் செய்தார். சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பாடுபட்ட மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும், குல்பூஷைனை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.

இந்தியா மற்றம் ஜாதவின் நிலைப்பாடுகளை மட்டும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரதிபலிக்கவில்லை. சர்வதேச சட்டம் மற்றும் புனிதத்தன்மையை மதிப்பவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா வரவேற்கிறது. வியன்னா ஒப்பந்தப்படி, ஜாதவை இந்திய தூதர் சந்திக்க பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு குல்பூஷன் ஜாதவ் தொடர்பாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் துன்பகரமான நாட்களை எதிர்கொண்ட அவரது குடு​ம்பத்தினரின் மன உறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார். பாகிஸ்தான் உடனடியாக குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Tags : Gulbhushan Jadhav, Minister of State, Foreign Affairs, Central Government, Jaishankar
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...