தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அண்மையில், தேச துரோக வழக்கில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள மன்றத்தில் நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி எனக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மேலும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு அபராதத்தை வைகோ கட்டினார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வைகோ சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்மமுறையீட்டு மனுவில், தன் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும், பழிவாங்கும் நோக்கத்திற்காகவே தமக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்த ஒரு வீடியோ ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடர்பாட்டிருப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், அரசு தரப்பில் போதுமான சாட்சி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைகோவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 4 வாரத்திற்குள் இதுதொடர்பாக காவல்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கு முடியும் வரை வைகோ இதுபோல் பேசக்கூடாது என்ற நிபந்தனையை நீதிபதி விதித்துள்ளார். அதற்கு வைகோ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வைகோ பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச சொல்லுங்கள் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: