நாமக்கல் அருகே சாய ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீரால் காவிரி நீர் மாசடைவதாக மக்கள் குற்றச்சாட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் சாய ஆலைகள் பகல் நேரத்தில் கழிவுநீரை தொட்டியில் சேகரித்து வைத்து இரவில் திறந்து விடுவதால் குடிநீருக்காக காவிரியில் திறக்கப்படும் நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வந்தன. இதில் சுமார் 47 சாய ஆலைகள் அரசின் அனுமதி பெற்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதர ஆலைகள் காவிரியில் கழிவுகளைக் கலப்பதாகக் குற்றச்சாட்டு எழவே மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சுத்திகரிக்காமல் கழிவுகளை வெளியேற்றியதாக 85க்கும் மேற்பட்ட சாய ஆலைகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர். மேலும் அங்கு சாய ஆலைக் கழிவுப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் அனுமதியுடன் இயங்கும் ஆலைகளால் தற்போது மீண்டும் பிரச்சனை தலை தூக்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அனுமதி பெற்று இயங்குவதாகக் கூறும் சாய ஆலைகள் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்து வந்த நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து காலை முதல் இரவு வரை சாயக்கழிவு நீரை வெளியேற்றாமல் தொட்டிகள் மூலம் சேகரித்து வைத்து நள்ளிரவு வேளையில் கால்வாயில் திறந்துவிடும் திருட்டுத்தன வேலையை செய்வது அம்பலமாகியுள்ளது. மேலும் கால்வாயில் நுரைபொங்க ஓடும் இந்த கழிவு நீரானது காவிரியில் கலக்கிறது. இதை அடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து காவிரிக்கு நொடிக்கு ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் அந்த நீரில் சாயக்கழிவு கலப்பது பொதுமக்களை வேதனையில் ஆய்த்தியுள்ளது. இதை தொடர்ந்து சில ஆலைகளில் உரிமையாளர்கள் செய்யும் மனசாட்சி அற்ற செயலால் மீண்டும் காவிரி ஆறு சாய கழிவு ஆறாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தமிழக அரசு உடனடியாக சோதனையை தீவிரப்படுத்தி மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: