ரூ 50 லட்சம் கோடியில் ரயில்வே திட்டத்தில் தனியார் பங்களிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை

நாடு முழுவதும் 185 புதிய பாதைகள் திட்டங்கள், 57 அகலப்பாதை திட்டங்கள், 263 இரட்டை பாதை திட்டங்கள் என மொத்தம் 505 திட்டங்களை ரயில்வே துறை நிறைவேற்றி வருகிறது. இத்திட்டங்களுக்கு 2015-16ம் நிதியாண்டு ரூ.29 ஆயிரத்து 422 கோடி, 2016-17 நிதியாண்டு ரூ.30 ஆயிரத்து 556 கோடி, 2017-18 நிதியாண்டு ரூ.33 ஆயிரத்து 914 கோடி வரை செலவிட்டு இருக்கிறது. இத்திட்டங்களுக்கு மொத்தம் ரூ 5 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. இது தவிர வரும் நிதியாண்டு 2021-22ம் இறுதிக்குள் மீதமுள்ள 34 ஆயிரம் கி.மீ தூரம் ரயில்வே பாதையையும் முழுமையாக மின்மயமாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இத்திட்டங்களுக்கு ரூ30 ஆயிரம் கோடி தேவைப்படும். ரயில்களின் வேகம் கூட்டவும், ஒரு பாதையில் ஒரே நேரத்தில் பல ரயில்கள் தொடர்ச்சியாக இயக்க ஏதுவாகவும் தற்போதைய சிக்னல்களை மாற்றி ஐரோப்பிய சிக்னல் முறை ( நிலை-2) சிக்னல்கள் அமைக்க ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு ரூ. 67ஆயிரம் கோடி தேவைப்படும். சமீபத்தில் ரயில்வே அறிவித்த 100 நாட்கள் செயல் திட்டத்தில் இதற்கான சோதனை திட்டமும் இடம் பெற்று இருக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில், ரூ.50 லட்சம் கோடி மதிப்பில் ரயில்வே திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு (பிபிபி) மூலம் நிறைவேற்றப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்ற கருத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை இணைக்கும் புதிய சரக்குப் பாதைகள், அதிவேக புல்லட் ரயில்கள், உலகத்தர நிலையங்கள் போன்ற ரயில்வே உள் கட்டமைப்பு விரிவாக்கங்களை வரும் 2030 ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற “ரயில்வே பார்வை -30” என்ற திட்டம் வகுத்து இருக்கிறது. இத்திட்டங்களுக்கு ரூ. 50 லட்சம் கோடி தேவை என கணக்கிட்டு, பொது தனியார் பங்களிப்பு (பி.பி.பி) மூலம் நிறைவேற்றப்படும் என பட்ஜெட் அறிவிப்பாக வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் 13 துறைகளில் 186 திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு மூலம் நடந்து வருகிறது. இத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரத்து 595 கோடி. இதில் அதிக பட்சமாக சாலை போக்குவரத்தில் - 139 திட்டங்கள், .மின்சாரத்துறையில் - 14, கப்பல் துறையில் - 12, பெட்ரோலியம்-5 விமானம் , ரயில்வே , வர்த்தகம் - தலா மூன்று திட்டங்கள், நகர்புற வளர்ச் சியில் இரண்டு திட்டங்கள் மற்ற துறைகளில் தலா ஒரு திட்டம் என நடந்து வருகிறது. சாலை போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களைப் போல ரயில்வே போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்க வில்லை. இதனால் இத்திட்டம் இணைக்கப்பட்ட ஜூன் 2013 முதல் கடந்த நிதி யாண்டு வரை ரூ 2170 கோடி மதிப்பில் 3 பொது தனியார் பங்களிப்பு திட்டங்கள் மட்டுமே ரயில்வேயில் நடந்து வருகிறது. இந்த சூழலில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் பி.பி.பி திட்டங்களாக அறிவித்து ரூ .20 முதல் ரூ. 25 லட்சம் கோடி தனியார் மூலதனமாக ரயில்வே எதிர்பார்க்கிறது.எனவே ரூ 50 லட்சம் கோடி மதிப்பில் ரயில்வே திட்டங்கள் பொது தனியார் பங்களிப்பு மூலம் நிறைவேற்றப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. அதனால மாற்று மூலதனங்களை ரயில்வே வாரியம் பரிசீலிக்க வேண்டும் இவ்வாறு மனோகரன் கூறினார்.

Related Stories: