×

முறையாக பராமரிக்கப்படாததால் பயனின்றி கிடக்கும் நவீன எரிவாயு தகன மேடை

திருவாரூர்: திருவாரூரில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை ஒரு வருடமாக செயல்பாட்டில் இல்லாததால் முழுமையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளை கொண்டுள்ளது. திருவாரூர் நகராட்சி பகுதியில் கடந்த 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 ஆயிரம் குடியிருப்புகளில் 54 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ள நிலையில் நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் வசிப்பவர்களுக்கு நகரின் நெய்விலக்குதோப்பில் உள்ள சுடுகாடு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மழை காலங்களில் விறகு மற்றும் வரட்டிகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் இதே சுடுகாட்டின் ஒரு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. தகனமேடைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எப்படி பராமரிப்பது போன்ற பல்வேறு காரணங்களினால் பணிகள் முடிந்தும் சுமார் 2 ஆண்டு காலம் வரையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுக்குபின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை பராமரிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் கோவையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி இறந்தவர்களை தகனம் செய்ய சடலம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 100 மட்டும் பங்கு தொகையாக செலுத்தப்பட்டது. இருப்பினும் சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த தகன மேடையானது சரிவர பராமரிக்கப்படாததன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு மிகவும் சிரமம் இருந்து வருவதால் இதனை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சங்கரனிடம் கேட்டபோது, இந்த தகன மேடையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இன்றும் 10 தினங்களுக்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு வேறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Modern gas cremation stage
× RELATED தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன...