கட்டுமான பணியில் அலட்சியம்... சுருங்கி போனது புத்தேரி குளம் கால்வாய்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக குளங்கள், கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை நம்பி தான் சாகுபடி பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே முறையாக சானல் தூர்வாரப்படாததால், கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் செல்ல வில்லை. பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை வந்துள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு சில சானல்கள் மற்றும் குளங்களில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் முறையாக நடக்க வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். புனரமைப்பு பணிகளில் சானல்கள் சுருங்கி விடுகின்றன என்றும் விவசாயிகள் கூறினர்.

Advertising
Advertising

நாகர்கோவில் அடுத்த புளியடி பகுதியில் செங்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு அனந்தனார் சானலில் இருந்து தண்ணீர் வரும். இந்த குளம் நிரம்பி மறுகால் ஓடை வழியாக புத்தேரி குளத்துக்கு தண்ணீர் செல்லும். இந்த மறுகால் ஓடை உடைந்து மழை காலங்களில் தண்ணீர் வெளியேறி சாலையும் சேதம் அடைந்து வந்தது. இந்த கால்வாய் வழியாக, அந்த பகுதி பாசன நிலங்களுக்கும் தண்ணீர் செல்லும். எனவே இந்த கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பொதுப்பணித்துறை சார்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நடக்கிறது. கால்வாயின் இரு பக்கமும் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்படுகிறது. இதில் கால்வாயின் அளவை சிறிதாக்கி பணி நடக்கிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வேகமாக வரும் சமயத்தில் மேலும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கால்வாய் அகலத்தை ஏற்கனவே இருப்பது போல் விரிவுப்படுத்தி கட்ட வேண்டும். மேலும் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்து கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், செங்குளம் மறுகால் கால்வாய் மழை காலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.

நீண்ட கால கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறை சார்பில் மறுகால் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. கால்வாயின் இரு பக்கமும் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, சமன்செய்து கட்டுமான பணியை நடத்தாமல், பெயரளவுக்கு கட்டுமான பணி நடப்பதால், கால்வாய் அளவு குறைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணடிப்பு செய்யப்படுவதை தவிர வேறு எந்த பயனும் விவசாயிகளுக்கு இல்லை. எனவே முறையாக புனரமைப்பு பணிகள் நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: