கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம்: வாக்கெடுப்பை இன்றைக்குள் முடிக்க அழுத்தம் தரக்கூடாது...குமாரசாமி பேச்சு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முன்னதாக, கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதேசமயம், அரசியல் நெருக்கடியில் உள்ள குமாரசாமி அரசை காப்பாற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி சட்டப்பேரவையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, கர்நாடக மாநில சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவை கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் குமாரசாமியும், துணை முதலமைச்சர் பரமேஷ்வராவும் நேற்று ஆலோசனை நடத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேருக்கும் குமாரசாமி கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். காலை 11 மணி அளவில் தொடங்கிய சட்டப்பேரவையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் தொடங்கி நடந்து வருகின்றது. அப்போது, எதிர்க்கட்சித்தலைவர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பினை இன்றைக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, பேசிய முதல்வர் குமாரசாமி, இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடப்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில்  கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். இந்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் யாரும் எல்லை தாண்டக்கூடாது என சபாநாயகர் ரமேஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஆளுங்கட்சி விரும்புகிறது, அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்படும் எனவும் சபாநாயகர் கூறினார். அவைக்கென்று உள்ள விதிகளை அனைவரும் பினற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, விவாதம் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சி தப்புமா? இல்லை கவிழுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த 15 மாதங்களில் 3-ஆவது முறையாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: