7 பேர் விடுதலை விவகாரம்..: ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், உள்ளிட்ட ஏழு பேர், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கடந்த செப்டம்பரில் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதையடுத்து, அமைச்சரவை அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, சி.சரவணன் அடங்கிய அமர்வு கடந்த ஜூலை 9ம் தேதியன்று விசாரித்தது. அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வரை அழைக்கும்படி, ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனால், கவர்னருக்கு உத்தரவிடும்படி கோர முடியும். இம்மனு, விசாரணைக்கு ஏற்புடையது தான் என்று வாதாடினார். அதே சமயம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆளுநருக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவர் செயல்படுவதால், நீதிமன்றத்துக்கு பதில் கூற வேண்டியதில்லை. அரசு தான், பதில் அளிக்க வேண்டும். இம்மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று வாதாடினார். இருதரப்பிலும், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பது குறித்த உத்தரவை தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரவை தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, நளினி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: