கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், அங்கு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில், ஆழ்கடலில் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 60 கி,மீ. வரை இருக்கும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து சின்னமுட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும், வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திற்பரப்பு, களியக்காவிளை, குலசேகரம், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories: