நள்ளிரவில் நிகழ்ந்த கொடூரம்: கள்ளக்குறிச்சி மற்றும் தூத்துக்குடி அருகே நிகழந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மற்றும் தூத்துக்குடி அருகே நிகழந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில், பெண்கள், குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர், தனியார் வேன் ஒன்றில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். திருச்செந்தூரில் சாமி தரிசனத்தை முடித்த அவர்கள், பின்னர் மறுபடியும் வீடு திரும்பியுள்ளனர். வேன், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே வந்தபோது, பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் நேரில் பார்வையிட்டார். இது குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: