எஸ்.ஐயை தாக்கிய இன்ஸ்பெக்டருக்கு 25 ஆயிரம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தைச் சேர்ந்தவர் மனோகரன். சென்னை நகர போலீசில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘கடந்த 2016ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது சகோதரர் சங்கர் காயம் அடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றேன். அப்போது எனது சகோதரரை, அப்போதைய வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் சந்துரு போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்.  விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவரை ஏன் போலீஸ் நிலையம் அழைத்து செல்கிறீர்கள்? என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.

போலீஸ் நிலையம் வரும்படி கூறினார். அங்கு சென்ற என்னை, இன்ஸ்பெக்டர் தாக்கி போலீஸ் நிலையத்தில் அமர வைத்தார். 3 மணி நேரம் கழித்து எங்களை விடுவித்தார். எனவே, இன்ஸ்பெக்டர் சந்துரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சந்துரு மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: