×

நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது எப்படி? அறிக்கை தயார் செய்தது பிமல் ஜலான் குழு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தன்னிடம் அதிகபட்சமாக எந்த அளவுக்கு உபரியை வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும், மத்திய அரசுக்கு எவ்வளவு நிதியை எப்படி வழங்குவது என்பது குறித்தும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல்ஜலான் கமிட்டி விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை இறுதி செய்துள்ளது.  நிதி பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் உள்ள உள்ள உபரி நிதியை அரசுக்கு வழங்க வேண்டும் என்று என்று விரும்பியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீடு கட்டமைப்பு (இசிஎப்) எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. பல்வேறு வகையிலான மதிப்பீடுகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் சுமார் ₹9 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது.

 பிமல் ஜலான் குழுவின் கடைசி ஆலோசனைக் கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில், ரிசர்வ் வங்கி தன்னிடம் எந்த அளவுக்கு உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம், எவ்வளவு நிதியை மத்திய அரசுக்கு கொடுக்கலாம், அதற்கான கால வரையறை என்ன என்பது குறித்து இறுதி முடிவு எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வளவு நிதி வழங்கப்படும் என தெரிவிக்கவில்லை. இருப்பினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது 3 முதல்  5 ஆண்டுக்குள் பிரித்து வழங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதி பற்றாக்குறையை 3.3 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உபரி நிதி தவிர, ரிசர்வ் வங்கியிடம் இருந்து டிவிடெண்டாக 90,000 கோடியை மத்திய அரசு எதிர்பார்க்கிறது. கடந்த நிதியாண்டில் டிவிடெண்டாக 68,000 கோடியை மத்திய அரசு பெற்றுக் கொண்டது.

உபரி நிதியை முடிவு செய்ய அமைக்கப்பட்ட குழுக்கள்
இதற்கு முன்பு, ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி குறித்து முடிவு செய்ய கடந்த 1997ல் வி.சுப்பிரமணியம் தலைமையிலும், கடந்த 2004ல் உஷா தோரட் தலைமையிலும், கடந்த 2013ல் ஒய்.எச். மாலேகம் தலைமையிலும் மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி தன்னிடம் 12 சதவீதம் அளவுக்கு இருப்பு நிதியாக வைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. உஷா தோரட் தலைமையிலான கமிட்டி ரிசர்வ் வங்கி தனது மொத்த முதலீட்டில் 18 சதவீதத்தை உபரி நிதியாக வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. ஆனால், உஷா தோரட் கமிட்டியின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொள்ளாமல், சுப்பிரமணியம் கமிட்டியின் பரிந்துரையை தொடர்ந்து கடைப்பிடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.  மலேகன் கமிட்டி அளித்த பரிந்துரையில், ரிசர்வ் வங்கி தனது லாபத்தில் உபரியாக உள்ள நிதியை ஆண்டுதோறும் இருப்பு முதலீட்டில் சேர்க்க வேண்டும். ஆனால், எவ்வளவு என்பதை தெரிவிக்கவில்லை.

Tags : Fiscal Deficit, Reserve Bank, Central Government, Bimal Jalan Group
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...