×

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி, மக்களை வாட்டி வதைத்தது. கத்திரி வெயில் குறைந்த பின்னர் ஒரு சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையே பதிவாகி வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாகவும் கடலோர மாவட்டங்கள், வட, உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல், தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மதுரை தெற்கில் 102.20 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 101.48, திருச்சி, கரூர் மாவட்டம் கே.பரமத்தியில் 101.30, தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் 100.40 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த 2 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று கூறியதாவது: அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ேவலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நிலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நிலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


Tags : Tamil Nadu
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்