ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் சமர்ப்பிப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானிடம் பழைய கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாள் பரக்காமணி என்று சொல்லக்கூடிய உண்டியல் காணிக்கை எண்ணும்  இடத்தில் பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்குகள் தொடங்கப்படுவது வழக்கம். அவ்வாறு நேற்று ஏழுமலையான் கோயிலில் ஜெயபேரி, விஜயபேரி துவார பாலகர்கள்  அருகே சர்வ பூபால வாகனத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கொலு வைக்கப்பட்டு வரவு, செலவு கணக்குகள் படித்து காண்பிக்கப்பட்டது.  பின்னர் சிறப்பு நெய்வேத்தியம் வைத்து,  உற்சவருக்கும், மூலவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு 3 டன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில்  எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம்  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின்போது ரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நேற்று ரங்கநாதர் கோயிலில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாமத்துடன் கூடிய பட்டு வஸ்திரங்களை இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் அபூர்வா சர்மா,  ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்டோர்  ஏழுமலையான்  கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியிடம் வழங்கினர்.

சந்திர கிரகணத்தையொட்டி தோஷ நிவாரண பூஜை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 5 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் 7 மணியுடன் கோயில் நடையும் அடைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு சந்திர கிரகணத்தால் ஏற்பட்ட தோஷங்களுக்குப் பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உட்பட பூஜைகள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஏகாந்தமாக நடைபெற்றது. பின்னர் ஆனிவார ஆஸ்தான பூஜைகள் செய்யப்பட்டது. 18 மணி நேரத்துக்கு பிறகு காலை 11 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

விஐபிக்களுக்கு ராமர்படி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி:
திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று கூறியதாவது: விஐபி தரிசனம் மூலமாக தினந்தோறும் இரண்டரை மணி நேரம் முதல் 3 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரம் அதிகரித்து வருகிறது. விஐபிக்களுக்கு ஒதுக்கக்கூடிய நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். எனவே நீதிபதிகள்,  மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் என சட்ட ரீதியான பதவியில் உள்ள புரோடோகால்  விஐபிக்களுக்கும்,  அவர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு எல்1, எல்2, எல்3 என்ற பிரிவினை இல்லாமல் விஐபி டிக்கெட் வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் லகு தரிசனம் என்று கூறக்கூடிய ராமர் படி வரை  விஐபிக்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து புதிய அறங்காவலர் குழு முழுவதுமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags : Annivara Asthanatham, Tirupathi Ezumalayan
× RELATED வரும் 20-ம் தேதி முதல் திருப்பதி...