கல்லூரி மாணவர் குத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தலைமை செயலகத்தில் புகுந்து மாணவர் காங்கிரஸ் போராட்டம்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கல்லூரிக்குள் மாணவர் குத்தப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.   திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்எப்ஐ மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவரஞ்சித், நிஷாம் என்பவர்கள் உட்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சிவரஞ்சித் வீடு மற்றும் பல்கலை கல்லூரியில் எஸ்எப்ஐ அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் உடற்கல்வி இயக்குனரின் போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் பல்கலை தேர்வு விடைத்தாள்கள் கிடைத்தது பரபரப்பை அதிகப்படுத்தியது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவரஞ்சித் மற்றும் நிஷாம் ஆகிய இருவரும் கேரள அரசு தேர்வாணயம் நடத்திய போலீஸ் தேர்வில் வெற்றி ெபற்று பணி நியமன பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறப்பிடத்தக்கது.

இந்நிலையில் எஸ்எப்ஐ இயக்கத்தினரை கண்டித்தும் இயக்கத்தின் முறைகேடுகளை கண்டித்தும் கடந்த சில நாட்களாக கேரளா முழுவதும் பாஜ, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சி மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் திருவனந்தபுரத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. பல்கலைக்கழக கல்லூரி முன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான எம்எஸ்எப் அமைப்பை சேர்ந்த 200க்கு மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.  இதற்கிடையே இந்த சம்பவத்தில் நீதி விசாரணைக்கு உத்தவிரவிட கோரி காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யு மாநில தலைவர் அபிஜித் தலைமை செயலம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். இந்த இடத்துக்கு அருகே காங்கிரஸ் மாணவர் அமைப்பினரும் திரண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பை மீறி கேஎஸ்யு மாநில செயலாளர் சில்பா உட்பட 4 மாணவர்கள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தலைமை செயலகத்திற்குள் நுழைந்து முதல்வர் அலுவலகம் அருகே சென்று கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: