பாஜ சீனியர் எம்பிக்களுடன் பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது வீட்டில் பாஜவை சேர்ந்த சீனியர் எம்பி.க்களை நேற்று சந்தித்தார். மக்களவையில் பாஜ.வுக்கு 303 எம்பி.க்கள் உள்ளனர். இவர்களை இதர பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பெண்கள் என மொத்தம் 7 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவாக பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, ஏற்கனவே 5 பிரிவுகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று காலை உணவின்போது தனது வீட்டில், 47 வயது முதல் 56 வயது வரையிலான சீனியர் எம்பி.க்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்கள் தொடர்பான விவகாரங்களில் எப்படி நடந்து கொள்வது உள்ளிட்டவை குறித்து எம்பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார். இதன் மூலம் மாநிலங்களவை, மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி.களுக்கு  பிரதமர் மோடியுடன் நேரில் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தேசிய தலைவருமான அமித்ஷாவும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர்.


Tags : PM , Senior MPs
× RELATED சொல்லிட்டாங்க...