வௌிநாட்டில் இந்தியர் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலை விசாரிக்க என்ஐஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: வெளிநாடுகளில் இந்தியர்கள், அவர்களின் சொத்துகள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை பற்றி விசாரிக்க, தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.  நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள், தீவிரவாத தாக்குதலுக்கான சதித் திட்டங்களை முறியடிப்பது, தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், அவர்களை கைது செய்து விசாரணை நடத்துவது போன்றவற்றை, ‘தேசிய புலனாய்வு அமைப்பு’ (என்ஐஏ) செய்து வருகிறது. இந்த அமைப்பு நாட்டில் நடக்க இருந்த பல தீவிரவாத தாக்குதல்களை தனது திறமையான புலனாய்வு மூலம் தடுத்துள்ளது. மேலும், ஏராளமான தீவிரவாதிகளை கைது செய்து வருகிறது. தற்போது உள்நாட்டில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை பற்றி மட்டுமே இந்த அமைப்பு விசாரித்து வருகிறது.

இனிமேல், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை பற்றி விசாரிப்பதற்கு இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டத் திருத்த மசோதா கடந்த 15ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நேற்று இது மாநிலங்களையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மானு சிங்வி, ‘‘சம்ஜுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவாமி அசீமானந்தா உட்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் தேசிய புலனாய்வு அமைப்பு தோல்வி அடைந்து விட்டது,” என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4  பேர் மீதும் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் எந்த ஆதாரமும் இன்றி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் என்ஐஏ வாதம் செய்தது. குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது, நீதிமன்றத்தில் அந்த வழக்கு எப்படி நிற்கும்? அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக இந்த வழக்கு பதியப்பட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்? குற்றப்பத்திரிக்கயைில் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் நீதிபதிகள் கூட என்ன செய்ய முடியும்?  மேல்முறையீடு என்பது அரசு அமைப்போ அல்லது அரசோ முடிவு செய்வது கிடையாது. அதை வழக்கில் சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிதான் முடிவு செய்கிறார்.  குற்றப்பத்திரிக்கையில் எந்த ஆதாரத்தையும் சட்ட அலுவலகம் கண்டுபிடிக்க முடியாதபோது, ‘மேல்முறையீடு செய்வதற்கு இடமில்லை’ என்று அவர் பரிந்துரை வழங்குகிறார். எங்கள் அரசு சட்ட அதிகாரிகளின் கருத்தின்படிதான் நடக்கிறது. அரசியல் கருத்தின்படி நடப்பது கிடையாது.

 எந்த வழக்காக இருந்தாலும் அது குறித்த குற்றப்பத்திரிக்கையில் ஆதாரங்கள் இல்லாதபோது அது நீதிமன்றத்தில் நிலைப்பது கிடையாது.  அடித்தளம் வலிமையற்றதாக இருக்கும்போது அதில் எப்படி கோட்டை கட்ட முடியும்?
கடந்த 2014ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு 195 வழக்குகளை பதிவு செய்தது. இதில், 129 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 129ல் 44 வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 41 வழக்குகளில் 184 பேர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.  நான் இந்த அவையில் உறுதி அளிக்கிறேன். எங்கே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டாலும், தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்கும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக, அமித் ஷா பேசுவதற்கு தொடங்கும் முன்பாக டிகே. ரங்கராஜன் தலைமையிலான  இடதுசாரி உறுப்பினர்கள், மசோதாவை நாடாளுமன்ற தேர்வு கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அதை அவையின் துணை தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் நிராகரித்தார். இதனால், இடதுசாரி எம்பி.க்கள் அமித் ஷாவின் பேச்சை புறக்கணித்தனர்.


Tags : Whites, Indians, terrorist attack, NIA
× RELATED அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன்...