×

சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை: அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:
*  தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய ஏரிகள் மற்றும் அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, வெளியேற்றம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யவும், வெள்ள அபாயத்தின் போது தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கும் ஏதுவாக தமிழ்நாடு நீர் ஆதார தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு குறித்த இணையதளம் உருவாக்கப்படும்.
*  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் செருங்களத்தூர் கிராமத்தில் மரப்பூங்கா சுமார் 40000 பூர்விக வன இனங்கள் மூலிகை செடிகள் உட்பட வனத்துறையின் மூலம் அமைக்கப்படும்.
*  வலைத்தளம் வாயிலாக நிலமாற்றம், நில உரிமை மாற்றம், குத்தகை மற்றும் நில எடுப்பு  உள்ளிட்ட அனைத்து நிலங்கள் தொடர்பான நடைமுறைகளை கம்ப்யூட்டர் மையமாக்கப்படும்.
*  தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 ல் அரசாங்க நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டவுடன் அவற்றை அகற்றவும்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு நிலங்களில் தற்பொழுது ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்சனைகளை மனதில் கொண்டு 114 வயதுடைய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு  வர அரசு முடிவு செய்து பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைக்க, ஒரு செயலர்  நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்பட உள்ளது.  மேலும் இந்த திருத்தச்சட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன.
* பொது சேவை மையங்கள் வாயிலாக நில உரிமையாளர்களிடம் இருந்து பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தற்பொழுது எங்கிருந்தும் இணையம் வழியாக பொது மக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.,
* போலியான  ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக,  பத்திரப்பதிவிற்கு  முன்னரே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் முறை நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனி இணைய வழி மனு பரிசீலனை முகப்பு செயல்படுத்தப்படும்.
* 9,633 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

‘அவினாசியில்  எனக்கு இடமே இல்லை’:

வருவாய் துறை அமைச்சர் உதயக்குமார் : வருவாய் துறை தற்போது நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பலர் தங்கள் இடம் எங்கே இருக்கிறது என்று ெதரியாமல் உள்ளனர். இதனால் சில நேரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இருந்த இடத்திலிருந்து கணினி மூலம் அவர்களின் இடத்தை கண்டுபிடிக்க முடியும். (பேரவை தலைவரை பார்த்து) அவினாசியில் உள்ள உங்கள் இடத்தை கூட கண்டுபிடித்துவிடாலம். பேரவை தலைவர் தனபால் : அவினாசியில் எனக்கு இடமே இல்லை பேரவையில் பலத்த சிரிப்பலை அமைச்சர் உதயக்குமார்: இந்தியாவில் கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அடுத்த கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு நடைபெறும். இந்த பணிக்கான மத்திய அரசின் குழுவில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் இடம் பெற்றுள்ளார்.




Tags : Illegal Occupants, Minister Udayakumar
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...