அடித்து சித்ரவதை செய்ததால் கூலிப்படை ஏவி என்எல்சி ஊழியரை கொன்ற மனைவி: பகீர் வாக்குமூலம்

சின்னசேலம்: வீட்டு செலவுக்கு பணம் தராமல், தினமும் அடித்து துன்புறுத்தியதால் என்எல்சி ஊழியரை அவரது மனைவியே கூலிப்படை ஏவி கொன்றார்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி மான்குட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணி அளவில் காரின் முன்பக்க டயர் மட்டும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது அதில் வந்த கும்பல் காரில் இருந்து  இறங்கி தப்பியோடியது. தகவல் அறிந்ததும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் கீழ்குப்பம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கார் டயரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் காரை சோதனையிட்டபோது டிக்கியில் சாக்குமூட்டையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவரது உடலில் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. மேலும் காரில் இருந்த அடையாள அட்டை மூலம் சடலமாக கிடந்தவர்  நெய்வேலி என்எல்சியில் ஆபரேட்டராக பணியாற்றி வந்த பழனிவேல்(52) என்பதும், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ஐ சேர்ந்தவர் என்பதும், காரில் இருந்த டிரைவிங் லைசன்ஸ் மூலம் அந்த கார் பழனிவேலுக்கு சொந்தமானது என்பதும்  தெரியவந்தது.  மேலும் அடையாள அட்டையில் இருந்த போன் நம்பரை வைத்து விசாரித்தபோது பழனிவேலின் மனைவி மஞ்சுளா (46) என்பதும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மஞ்சுளா வீட்டுக்கு  சென்றனர். ஆனால் மஞ்சுளா இல்லை. வீட்டை பூட்டு விட்டு வெளியூர் செல்ல நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நின்று கொண்டிருந்தார்.  அங்கு அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது மஞ்சுளா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:என்எல்சி நிறுவனத்தில் பழனிவேல் கிரேன் ஆபரேட்டராக இருந்துள்ளார். சுமார் ஒரு லட்சம் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது. இவருக்கு 2 மகள், ஒரு மகன் இருந்துள்ளதால் அதிக செலவு செய்யாமல் பணம் சேர்த்து வைப்பதிலேயே குறியாக  இருந்துள்ளார். பணத்தை வீண் செலவு செய்யமாட்டார். இதன்காரணமாக, வீட்டு செலவுக்கு சரியாக பணம் தராமல் மஞ்சுளாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதைப்போல மனைவியை சுதந்திரமாக நடமாடவிடவில்லை என்றும்  தெரிகிறது. மேலும், தனது மைத்துனர் ராமலிங்கத்தை தன் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதுவும் மஞ்சுளாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, அவரை கொலை செய்ய மஞ்சுளா தனது தம்பி ராமலிங்கத்துடன் கடந்த வாரம் திட்டம்  தீட்டியுள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் முதல் ஷிப்ட் வேலை முடிந்து வந்த பழனிவேலுவை ராமலிங்கம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதற்கு மஞ்சுளா உடந்தையாக இருந்துள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து மஞ்சுளா, ராமலிங்கம் (38), கூலிப்படையை சேர்ந்த 2 பேர் என 4 பேர் மீது வழக்கு பதிந்து, நேற்று மஞ்சுளாவை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: