வேலூர் மக்களவை தொகுதி வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனு செய்தார்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ேநற்று கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இன்றுடன் வேட்புமனுதாக்கல் முடிகிறது.வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம் ஏற்கனவே மனு தாக்கல் செய்தார்.  மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் மனுத் தாக்கல் செய்தார்.

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், வில்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், உட்பட கூட்டணி கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கதிர் ஆனந்துக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி சங்கீதா வேட்பு மனுதாக்கல் செய்தார். நேற்று சுயேச்சைகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 8 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 31 பேர்  மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், திமுக வேட்பாளர் வெற்றி பிரகாசமாக உள்ளது, ஹைட்ரோகார்பனுக்கு மத்திய அரசு அனுமதி கொடுப்பதை நாங்கள் பலமாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக செய்தால் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டி இருக்கும்’ என்றார்.

பழைய வேட்பாளர்கள் பெயர்கள் வாக்கு இயந்திரத்தில் அகற்றம்

வேலூர் மக்களவை தேர்தலில் 1553 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த தேர்தலின்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் அப்போது போட்டியிட இருந்த  வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் பொறிக்கப்பட்டு அப்படியே இருந்தது. தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் அதே வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஆனால் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக மாற்றம்  உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படத்துடன் கூடிய பேப்பர் அகற்றும் பணி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.

Related Stories: